Wednesday, January 5, 2011

வேதநெறி தழைத்தோங்க ! மிகுசைவத் துறை விளங்க !


திருச்செந்திலாண்டவன் துணை

வேத நெறி தழைத்தோங்க ! மிகுசைவத் துறை விளங்க !

வெளியீடு :-
ஸ்ரீ காசிமடம்,
திருப்பனந்தாள் - 612 504,
தஞ்சை மாவட்டம்,
தமிழ்நாடு.

 
முதல் பதிப்பு        :    2010
படிகள்                     :    1000

நூலாக்கம் :-


    “கயிலைமாமுனிவர்”
    ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்.
    அதிபர், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள்
- 612 504.


கிடைக்குமிடம் :-

    மேலாளர், ஸ்ரீ காசிமடம்,
    திருப்பனந்தாள் - 612504,
    தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு.



(அனுப்புகைச் செலவுக்கு ரூ. 15.00 அஞ்சல் வில்லையாகவோ
அல்லது மணியார்டராகவோ அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.)


அச்சிட்டோர் :-

    ஸ்ரீ குமரகுருபரர் ஆஃப்செட் பிரிண்டர்ஸ்,
    ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள் - 612 504.


முன்னுரை



‘ஓமத் தோடயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.’
                                    - நாவுக்கரசர்.
               
    தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 2010 பிப்ரவரி 5,6,7 தேதிகளில் தமிழக சைவ ஆதீனகர்த்தர்கள், திருமடங்களின் தலைவர்கள், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சைவப்பெருமக்கள்ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டு அழைப்பிதழில் குறிப்பிடப்பெற்ற ‘வேத, ஆகம, புராண, இதிகாச, திருமுறை, சித்தாந்த, சாத்திர, அடிப்படையில்’ என்ற நோக்கங்களுக்கும், மாநாட்டு இறுதியில் - மூன்றாம் நாள் நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவது “வேத, ஆகம, புராண, இதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களின் கருத்துக்களுக்கு மாறுபடாமல் அவரவர்கள் நடந்துகொள்ள வேண்டும்” என்பதற்கும் மாறாக, மரபுப் பிறழ்ச்சிகள், மீறல்கள் செய்ய முயலும் பேச்சுகள், செயல்களுக்கு இனி வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது.

ஆனால், மாநாட்டுத் தீர்மானத்திற்குப் பின்னும் சிலர், சைவ மரபுகள் எப்படிப் போனாலென்ன? நம்முடைய வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வோம் என்ற தன்னல நோக்குடன் செயற்படுவதைக் கண்டு “நெஞ்சு பொறுக்குதில்லை” - சைவ சமய - திருநெறியத் தமிழ் மரபின் மாட்சிகளைத் தொடர்ந்து எழுதிவருகின்றோம். மாநாட்டு நோக்கங்களுக்கும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் விரோதமாக அரங்கேறிவரும் செய்கைகளைச் சைவப் பெருமக்கள் உணரவேண்டி, “வேத நெறி தழைத்தோங்க ! மிகுசைவத் துறை விளங்க’ எனும் தலைப்பில் ஸ்ரீ குமரகுருபரர் திங்கள் இதழில் (கார்த்திகை - 2010) எழுதப்பெற்றதைச் சில திருத்தங்கள் செய்து, தனி நூலாக இந்நூல் வெளியிடப்படுகிறது.

தருமையாதீனம் வெளியிட்டுள்ள பெரியபுராணம் முதற்காண்டத்தின் ஆசியுரையில் ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள், ‘வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்களே நமது சைவ சமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்களாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின்படியே நடக்க வேண்டும். நடவாதார், சைவத்திற்குப் புறம்பானவராவர்’ என்று அருளியுள்ளார்கள்.

இறைவன் அருளிய சட்ட நூல்களை எந்த மானுடரும் மாற்றவோ, திருத்தவோ அதிகாரம் பெற்றவர் இல்லை. அப்படி மாற்றுவோர், திருத்துவோர், அவர்தம் செயல்களுக்குத் துணைபோவோர் அனைவருமே சைவ சமயத்துக்குப் புறம்பானவர்கள். “மறை வழக்க மிலாத மாபாவிகள்” என்பது தமிழ் ஞானசம்பந்தர் திருவாக்கு - இறை வாக்கு.

வேதங்களும், மிகுசைவத்துறையாகிய சிவாகமங்களும் தழைத்தாலன்றி, மானுடவர்க்கமாகிய பூதபரம்பரையும் செம்மை நெறியில் பொருந்திநிற்கமாட்டா. தமிழின் பெயராலும், தமிழ்த் திருமுறை, சாத்திரங்களின் பெயராலும், அவற்றின் உன்னதத்தைக் குலைக்க விரும்புவோர் சிலர் நிலையில்லாத தங்கள் சுயநிலத்திற்காக, சுய பெருடைக்காக பாடுபடுகிறார்கள். இத்தயை நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, பல போலிச் சைவர்கள் துணைகொண்டு, இன்று தலை விரித்து ஆடுகிறது.

சைவ ஆதீனங்களுக்கும், திருமடங்களுக்கும், இதை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அடக்கி, ஓடுக்கி, அப்புறப்படுத்த வேண்டிய தலையாய கடப்பாடு இருக்கின்றது. இதில் எள்ளளவும் மெத்தனம் காட்டல் கூடவே கூடாது.

பிரச்சாரங்கள் போலியாக இருந்தாலும் அவற்றால் விளையும் கேடு மிகக் கொடுமையாகவே இருக்கும். களைகள் தாட்சண்யம் இல்லாமல் களைந்தெறியப்பட வேண்டும். இச்சிவகைங்கர்யத்தில் அனைத்து சைவ மக்களும் ஒருங்கிணைந்து கருத்து வேறுபாடு இல்லாமல் பாடுபடல் வேண்டும். செயத்தக்கவை செய்யாமையானும் கெடும்.

‘தருமத்தை நாம் காத்தால்தான் தருமம் நம்மைக் காக்கும்” என்பது ஓர் ஆப்த வாசகம். இப்போதுள்ள சூழ்நிலையைக் கண்டு சைவர்கள் மனச்சோர்வு கொள்ளலாகாது. ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் ; தருமம் மறுபடி வெல்லும் ;………. காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.’ கெட்ட காலம் நல்ல காலமாக மாறுவதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும். அத்தகு செயலுக்குத் தெய்வம் துணை நிற்கும். வெற்றி அருளி வாழ்த்தும்.


சைவத் திருமுறைகளை மேற்கோள் காட்டி, அவற்றிக்கு ஒவ்வாத பொருள் கற்பித்துச் செயல்படுவோர் திருமுறை விரோதிகள். இவர்கள் நிகழ்த்தும் ஆரவாரப் படாடோபங்கள் பொருளற்றவை. இவர்கள் இயற்றும் செயல்களும், சடங்குகளும் தீமைகளை அபரிவிதமாகத் தோற்றுவிக்கும்.


கவர்ச்சி சிவணிய பொய்ப் பிரச்சாரத்தில் சிக்கவைக்கும் விரோதிகளின், சுயநலமிகளின் வலைவீச்சுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு எச்சிரிக்கைக் குரல் கொடுப்பதற்காகவே இச்சிறு நூல் வெளியிடப்படுகிறது.

இதை உலகெங்கும் உள்ள சைவத் தமிழர்கள் போற்றி, பயின்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நம் குறிக்கோள். ஏற்றுப் போற்றுவோர் நூல் முழுதுமோ, பகுதியோ பயன்படுத்திக்கொள்ள, மொழிபெயர்க்க உரிமை உடையவராவர்.

தீமைகளிலிருந்து விடுபட்டு, சைவர்கள் செவ்விய வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று ஸ்ரீ செந்திலாண்டவனை வணங்கி வாழ்த்துகிறோம்.

ஆழ்க தீயது ! எல்லாம் அரண் நாமமே சூழ்க! வையகம் துயர் தீர்க !


                                    - சிவ சிவ


“ சைவத்தின் மேற்சம யம்வே
    றிலையதிற் சார்சிவமாந்
தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனும்
    நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவார
    முந்திரு வாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்
    றாளெம்மு யிர்த்துணையே !”

-    சைவ எல்லப்ப நாவலர். திருவருணைக் கலம்பகம்.


நம்பிக்கை


    கடவுள் என்ற சொல், இரண்டு செய்திகளை நமக்குத் தருகிறது. கடந்தது, உள்ளது, கடவி நிற்பது என்பன அச்செய்திகள், உயிருக்கு உயிராய் இருந்து இறைவன் உயிரை (ஆன்மாவை) செலுத்தி வருகிறான். யாவற்றையும் கடந்தது என்றால், அதை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதை, ‘உள்ளது’ என்று சொல்ல அதிக பலம் வாய்ந்த நம்பிக்கை வேண்டும். ‘பரம்’ என்று அதைக் குறிக்கும்போதும், நம்பிக்கையின் ‘இருப்பு’ அதிகமாகத் தேவைப்படும். ‘தத்துவாதீதன்’ என அந்த மூல முதற் பொருளைக் குறிப்பதும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆகும்.


    கடவுளியலும், அதையொட்டிய சமயமும், சடங்கு சம்பிரதாயம், கிரியைகள், வழிபாடுகள் யாவும் நம்பிக்கை என்னும் ஆணிவேர் உடையனவே ஆகும். ‘யார் சொன்னால் நம்ப வேண்டும் ?’ என்பதில் தெளிவு இல்லையென்றால் ‘நம்பிக்கை’ அர்த்தமற்றதாகிவிடும், நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.

‘சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது’ - பெறுதற்கரிய நல்லூழ் காரணமாகச்  சைவமாம் சமயம் சாரப் பெற்றவர்கள் சமயம் தொடர்பான செய்திகளை யார் சொன்னாலும் நம்புவது என்ற போக்கில், எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருத்தலாகாது.

நம் சமயத்திற்கு ஆசாரியர்கள் நால்வர். அவர்கள் என்னென்ன அருளிச் செய்தார்களோ அவற்றையே சைவம் ஏற்கும் ;  அவர்களின் திருவாக்குகளையே உண்மைச் சைவம் நம்பும்; அவர்களின் இறை மொழிகளுக்கே சைவம் கட்டுப்படும். அவர்கள் வரைந்த கோடே நம் பற்றுக்கோடு.

நம் உயிர்ச் சைவத்தின் முன்னோர்களாகிய அருளாளர்கள், குருமார்கள் அத்தனைபேரும், ஆசாரியர்கள் வகுத்தளித்த பாதையை விட்டு ஓர் அடிகூட விலகி நடந்ததில்லை; விலகி நடக்க விட்டதுமில்லை. ஆகவேதான் “நால்வர் பொற்றாள் துணை” என்று ஓதி வருகிறோம்.

வேத உடன்பாட்டுச் சமயம்


    நம் சமயாசாரியர்கள் அருளிய எட்டுத் திருமுறைகளிலும் அந்நெறியிலேயே அமைந்த மூன்று திருமுறைகளிலும், இவை யாவற்றிக்கும் காலத்தால் முற்பட்ட திருமந்திரத்திலும் - ஆகப் பன்னிரண்டு திருமுறைகளிலும் நம் சமயம் வேத உடன்பாட்டுச் சமயமாகவே சொல்லப் பெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளிலுமாகச் சற்றொப்ப ஆயிரத்து இருநூறு இடங்களில், வேதங்க்ள் ஆகமங்கள் போற்றப்படுகின்றன. சைவ இலக்கியங்கள், சாத்திர நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்று, தொகு மொத்தமாக வைத்து எண்ணிக்கை செய்தால் இது இன்னும் பன்மடங்காகப் பெருகும்.


சமயாசாரியர்கள் மட்டுமன்றிச் சந்தானாசாரியர்கள் நால்வரும், நம் சமயத்தினருக்கு உத்தரவிடும் உரிமையுள்ளவர்கள் ஆவர். அவர்கள் நம் சமயத்தின் தத்துவங்களை - மெய்ப் பொருளியலை - மிகத் துல்லியமாக வரையறுத்து வழங்கினார்கள். இந்த வரையறை, பதின்மூன்றாம் நூற்றாண்டு முதற்கொண்டு சைவர்களுக்கு மேல் வரிச் சட்டமாக அமைந்தது. மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் இவையும் சைவத்தை வேத உடன்பாட்டுச் சமயமாகவே வரையறுத்து வற்புறுத்துகின்றன.

சைவத் திருமுறைகள், சாத்திரங்கள், அருளாளர்களின் இலக்கியங்கள், புராணங்கள் முதலியன எல்லாவற்றிலும் வேதங்கள், ஆகமங்கள் பற்றிக் கூறப்படும் செய்திகளை ஒருசேரத் திரட்டிப் பார்த்தால் கீழ்வரும் உண்மைகளைஅறியாலம்:-


1.    நான்கு வேதங்களும் சைவத்திற்கு உடன்பாடானவை. சைவம் ஆகம நெறியிலான செயற்பாடுகளை உடைய சமயம். வேதங்களையும் ஆகமங்களையும் நமக்காக நம்பெருமானே அருளினார். வேதம், பொது. ஆகமம். சிறப்பு.

2.    மிக நுட்பமான வேதங்களை வகுத்தளித்தவர் வியாசர். வியாசர் அருளிய பதினெண் புராணங்களை அங்கங    ;கும் உள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்தவர் சூத பௌராணிகர். ஆயிரம் அந்தணர்களுக்குச் சமமான அப்பெரியார் ஒரு சூத்திரர். ஆபிதான சிந்தாமணி காண்க.

3.    சிவாகமங்கள், திருக்கோயில் அமைப்பு, இறை திருவுருவங்கள், நாட்பூசைகள், சிறப்பு வழிபாடுகள், வேள்விகள் முதலிய அனைத்தையும் கூறுவன. அவ்வாகமங்களில் வல்ல சிவாசாரியர்களே பரார்த்த வழிபாடாகிய திருக்கோயில் வழிபாடுகள் செய்ய உரியவர்கள் ஆவர்.

4.    வேதங்கள் சொல்லும் இருபத்தொரு வேள்விகளும் சிவபரம்பொருளை நோக்கியே அமைவன. அவற்றில் ஏழு, பாகயக்ஞங்கள். ஊன் வேள்விகள் - அவை சிவாகமங்களில் கூறப்படவில்லை. பிற வேள்விகள் பலவும் வேறுபாடு உடையனவே.

5.    வேதத்திற்கு நிருத்தம் என்னும் அங்கத்தின்வழி - வேதமொழியின் ஆதிநிகண்டின்படி - தத்தம் மொழிப் புலமைக்கேற்ப விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. வேதம் இறைவனை முற்ற உணரவில்லை ; வேத சூட்சுமங்களை மனிதர்கள் யாரும் முற்ற உணரவில்லை. ‘வேதத்திற்குப் பொருள் அருளிய படலம்’ எனத் திருவிளையாடற் புராணத்தில் வருவதைக் கொண்டு, பெருமானே தாம் அருளிய வேதத்திற்குத் தாமே பொருள் சொன்னாலொழிய வேதம் முற்ற உணர இயலாத அதி சூட்சுமமானது என அறியலாம். வேதத்;திற்குப் பொருள் சொல்வதில் ஏற்பட்ட வேறுபாட்டாலேயே, பல சமயங்கள் கிளைத்தன.

6.    ‘வேதத்தை விட்ட அறமில்லை’இ வேதத்தில் சொல்லப்படாத தர்மம் வேறில்லை.
7.    வேத நிந்தனை செய்வதைச் சமய விரோதச் செயலாக - மாபாதகச் செயலாகக் கருத வேண்டும். வேத நிந்தனை, வேத விரோதச் செயல்கள் செய்வோரைச் சைவம் புறப்புறச் சமயத்தினராகவே கருதுகிறது. சமணர், பௌத்தர், புறப்புறச் சமயிகள், வைணவர், ஏகான்மவாதிகள் புறச்சமயிகள்.

இவை சுருக்கம். இவற்றின் அடிப்படையில், மேலும் சில தெளிவுரைகளை, இனிக் காண்போம்.

இறைவன் அருளிய பொதுவும் சிறப்பும்


            பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில்,
       
            ‘வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் ;
            ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன ;
            நாதன் உரை அவை நாடில், இரண்டு அந்தம்
            பேதம் அது என்னில் பெரியோர்க்கு அபேதமே’ (8-28)


    என ஒரு மந்திரம் உள்ளது. இதில் ‘வேதம் ஆகமம் ஆகியன இறைவனால் அருளப்பட்டவை’ என வருகிறது. நேர் நிரல் நிறை இலக்கணப்படி, வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு நூல் என்றும் இதில்   தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அடியில் மீண்டும் ‘நாதன் உரை அவை’ என்று தௌ;ளத் தெளிவாக உறுதிசெய்து அறிவித்தருளினார் திருமூல தேவ நாயனார்.

    இரண்டு அந்தம், வேதாந்தம் சித்தாந்தம். வேதத்தால் மட்டுமே இறைபணிகள் செய்யும் மார்க்கம், வேதாந்தம். அந்நெறியில் திருக்கோயில் வழிபாடுகள் மையப்படுவதில்லை. ஒரோவழி உண்டென்றாலும் அதை வேத மந்திரங்களை மட்டுமே பின்பற்றும், சித்தாந்தம் ஆகமவழிப்பட்ட வழிபாடுகளைக் கடைப்பிடிக்கும். ஆகமங்களில் வேத மந்திரங்களும் உள.

    ஆகம நூல், ‘சைவ நூல்” எனச் சித்தியார் கட்டளையாகச் சொல்கிறது. வேத நூலை ‘அநாதி’ என்றும் சித்தியார் பிரகடனப்படுத்தியுள்ளது (சிவ.சித்.சுப.சூ.7.பா.15) சாத்திரம் என்பது கட்டளை; உத்தரவு. சைவ சமயத்தின் உத்தரவை - கட்டளையை மீறுபவர்கள் சைவர்களாக நீடிக்க முடியுமா?

    சிவனை வழிபடும் வேறு கிளைச் சமயத்தினருக்கு, நம் சைவத்தின் சித்தாந்தக் கட்டளைகள் இல்லை. அவர்கள்
சொல்வதை, நம் சமயத்தினர் கேட்டு நம் தோத்திர - சாத்திர விதிகளை -மரபுகளை - கட்டளைகளை நாம் மீறலாகுமா?

வேதியர் யார்?

   
    சைவ சமயம், ‘வைதிக சமயம்’ எனப்படும். வைதிகம் என்ற சொல்லுக்கு, ‘வேத சம்பந்தம் உடையது’ என்பது பொருள் (காண்க - மதுரைத் தமிழ்ப் பேரகராதி. வை.). வேதத்தை அருளியவன், வேதத்தை ஓதிக்கொண்டே இருப்பவன்; -மறைநாவர் - வேதமொழியர் - தூமறைபாடும் வாயர் - ஆதலால் இறைவனை ‘வேதியன்’ - ‘சொல்துணை வேதியன்’ - என்று சமயாசாரியர்களும் அருளாளர்களும் உணர்ந்து உரைத்தனர்.

    வேதங்களைக் குரு அனுமதியுடன் ஓதுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வேதியர் எனக் குறிக்கத்தக்கவர் ஆவர். வேதியர் என்னும் தகுதி, தொழிலால் - செயலால் - வினையால் வருவதாகும். இதனால்தான் சிவாசாரியருள் ஆகம பாண்டியத்துடன் வேதாத்யயனமும் செய்தவர்களைச் “சிவ வேதியர்” எனக் குறிப்பிட்டனர் நம் முன்னோர். இந்நுட்பத்தைச் சேக்கிழார் நன்கு கையாண்டுள்ளார்.

    பார்ப்பனர்களாகப் பிறந்தவர்கள் வேதியராக ஆக வேண்டும். வேதம் ஓதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு தொழில்களையும் முறையாகச் செய்தல் வேண்டும். இது இலக்கணம். இதனை ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம்’ எனத் தொல்காப்பியம் சொல்கிறது. இந்த ஆறனுள்ளும் ‘வேதவேள்வி’ செய்வதிலேயே பார்ப்பனர்களின் தொழில் வெற்றி அமைகிறது. இக்கருத்தை,

‘கேள்வியால் சிறப்பு எய்தினானை
வேள்வியால் விறல் மிகுத்தன்னு’

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளு விளக்குகிறது. இது பார்ப்பன வாகைத் துறையின் இலக்கணம். இத்துறை அமைந்த புறநானூற்றுப் பாடல் ஓன்றின் ஒரு பகுதியைப் பார்த்தால் இச்செய்தி மேலும் தெளிவாகும்.

            ‘நன்று ஆய்ந்த நீள் நிமிர்சடை
            முதுமுதல்வன் வாய் போகாது
            ஒன்று புரிந்து ஈர் இரண்டின்
            ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
            இகல் கொண்டோர் மிகல் சாய்மார்
            மெய் அன்ன பொய் உணர்ந்து
            பொய் ஓராது மெய் கொளீஇ
            மூஏழ் துறையும் முட்டின்று போகிய
            ஊரைசால் சிறப்பின் உரவோர் மருக !’
                                (புறம். 166)

    -இது சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை, ஆவூர் மூலஙகிழார் விளித்த விளி.

    இந்தப் புறநானூற்றுப் பாடல் பகுதியில் சிவபெருமான் ‘முது முதல்வன்’ எனப்படுகிறார் ; இறைவன் வேதம் ஓதுவதும், வேதம் அறம் ஒன்றையே மேவியது என்பதும் வருகிறது. வேதம் ‘முதுநூல்” எனக் குறிக்கப்படுகிறது. வேதம் நான்கு என உரைக்கப்படுகிறது.

    இப்பாடல் பகுதியில் வரும் ‘ஆறு’ என்பது, ஆறு அங்கங்களைக் குறிக்கிறது. அவையாவன : 1. வியாகரணம்; 2. சோதிடம்; 3. நிருத்தம் ;
4. சந்தம் ; 5. சிக்கை ;  6. கல்பம் .
 



    இப்பாடல் பகுதியில் வரும் ‘மூ ஏழ் துறை’ என்பது,  வேதம் சொல்லும் இருபத்தொரு வேள்விகளைக் குறிக்கிறது. அவையாவன : சோம வேள்விகள் ஏழு; அவிர் வேள்விகள் ஏழு;  பாக வேள்விகள் ஏழு.
 
    சோம வேள்விகள் ஏழாவன :- 1. அக்னிஷ்டோமம்; 
2. அதியக்னிஷ்டோமம் ;  3. உக்தியம் ;  4. சோடசி;  5. வாஜபேயம் ;
6. அதிராத்திரம் 7. அப்தோர் யாமம்.

    அவிர் வேள்விகள் ஏழாவன :- 1. அக்னியாதேயம் ;  2. அக்னி Nஉறாத்திரம் ;  3. தர்ச பூர்ண மாசம் ;  4. சாதுர் மாஸ்யம் ;  5. நிரூடபசுபந்தம்; 6. ஆக்கிரயணம் ;  7. சௌத்திராமணி.

    பாக வேள்விகள் ஏழாவன:- 1. அஷ்டகை;  2. அபார்வணம்;
3. சிராத்தம்; 4. சிராவணி;  5. ஆக்கிரகாயணி;  6. சைத்திரி;  7. ஆச்வயுஜி.

ஊன் வேள்விகள் சைவத்தில் உண்டா?


    பாக  வேள்விகள், ஊன் பெய்து செய்யும் வேள்விகள். இவற்றை ஆகமங்கள் சொல்லவில்லை. அதாவது இவற்றைச் சைவர்கள் செய்யலாகாது. பெருமான் சைவத்துக்காக அருளிச் செய்த சிவாகமங்களில் பாக வேள்விகளைக் கூறாமையைக் கொண்டு இக்கருத்தை உணரலாம்.

    ஊன் வேள்விகள் யாருக்கு உரியன? என்ற வினாவுக்கு விடைகாண வேண்டும். அதற்கு, மேற்காண் புறநானூற்றுப் பாடல் பகுதிக்குப் பழைய உரையைப் பார்ப்பது முதல் தேவையாகிறது. அவ்வுரைப்பகுதி வருமாறு:-
‘பெரிதும் ஆராயப்பட்ட மிக்க, நீண்ட சடையினை உடைய, முதிய இறைவனது வாக்கைவிட்டு நீங்காது, அறம் ஒன்றையே மேவிய, நான்கு கூற்றை உடைத்தாய், ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட, ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு, மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச்சமயத்தோரது, மிகுதியைச் சாய்க்க வேண்டி, அவரது மெய் போன்ற பொய்யினை உளப்பட்டு அறிந்து, அப்பொய்ம்மையை, மெய் என்று கருதாமல், உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி, இருபத்தொரு வேள்வித் துறையையும் குறையின்றாகச் செய்து முடித்த, புகழ் அமைந்த, தலைமையுடைய, அறிவுடையோர் மரபில் உள்ளோனே!’

விண்ணந்தாயனின் முன்னோர் இருபத்தொரு வேள்விகளும் செய்தவர்கள் என இவ்வுரை தெளிவு செய்கிறது. அதில் ஏழு பாக வேள்விகளும் அடக்கம்தானே. அப்படியென்றால் பார்ப்பனர்கள் ஊன் பெய்து வேள்வி செய்தார்கள் என்றாகும். ‘மோட்சம் விரும்புபவர்கள் காமிய வேள்விகள் செய்தல் ஆகாது’ என்பதை ஸ்மார்த்தர்களுக்கான சாஸ்திர நூல்கள் விதித்துள்ள கட்டளை. அவ்வேள்விகளில் செய்விப்போராக இருந்து நடத்துவது அவர்களின் தொழில் ஆகும். இது ‘வேட்பித்தல்’ எனப்படும்.

சித்தாந்த அறிஞராகிய அருணை வடிவேல் முதலியார்,


    “வேதத்துள் ஊன் வேள்வி கூறப்பட்டதாயினும், வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுள் கூறப்பட்ட அறங்கள் அவ்வத் திறத்தார்க்கே உரியனவன்றி, எல்லா அறங்களும், எல்லோர்க்கும் உரியனவன்றி, எல்லா அறங்களும், எல்லார்க்கும் உரியன அல்ல்  அவ்வாற்றால் ஊன் வேள்விகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கியே கூறப்பட்டன என்பதும், ஊன் வேள்வியன்றித் தூய வழிபாடுகளும், தூய நோன்புகளும்.
அவற்றிற்கு உரியாரை நோக்கி வேதத்தில் கூறப்பட்டுள்ளன என்பதுமே வேதத்தை உடன்பட்டோர் துணிபு ஆகலின் ‘வேதத்தை விட்ட அறமில்லை’ என்பது முதலியவற்றால் வேதத்தின் சிறப்பை வலியுறுத்தினார் (திருமூலதேவ) நாயனார். திருவள்ளுவ நாயனாரும்,

    ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று’    (குறள் - 259)


என, “ஊன் வேள்விகள் உயர்ந்தோர்க்கு உரியன அல்ல’ என்பது மாத்திரையே கூறியதல்லது  ‘ஒருவர்க்கும் ஆகாது’ என, முற்றக் கடிந்து கூறினாரல்லர். ஊன் வேள்விகளை அறிவுடையோர் விலக்காமைக்குக் காரணம், அவற்றாலும் சிலர்க்குக் கடவுள் உணர்ச்சி உளதாதல் பற்றியேயாம். புத்த சமண மதங்கள், கடவுட் கொள்கை இல்லாத மதங்களாதலின், அவை அவற்றை மறுக்குமுகத்தான், கடவுள்  வழிபாட்டினையே மறுப்பனவாயின. அன்றியும் ஊன் வேள்வியை விலக்கு தலைத், தம் மதத்தினைப் பரப்புதற்குத் தக்கதொரு கருவியாகவும் கொண்டு, தம் ஆரவார உரைகளைப் பெருக்கின என்பது, ‘கொல்லாமை மறைந் துறையும் அமண் சமயம்’ (தி.12.தி.நா.பு.37) என்ற சேக்கிழாரது திருமொழிக் குறிப்பால் நன்குணரலாம்.

    ‘வேத வேள்வியை நிந்தனை செய்து, உழல்
    ஆதம் இல்லி, அமணொடு தேரரை’


என்னும் திருஞானசம்பந்தப் பெருமான் திருமொழியும் இக்கருத்தேபற்றி எழுந்தது.

    ‘கடவுள் வழிபாடு உயிர்க்கொலையோடு கூடாது நிற்றலே சிறப்பு, கூடினும் அமைக!’ என்பது வேத மதங்களின் கருத்து.
‘கடவுள் வழிபாடு, செய்யப்படாது ஒழியினும் ஒழிக் உயிர்க்கொலை கூடாது என்பது புறமதங்களின் கொள்கை. ‘இப்புறமதக் கொள்கைகளால், ஒழிவது கடவுள் வழிபாடேயன்றி, உயிர்க்கொலையன்று’ என்பதை ஊன்றி உணர வல்லார்க்கு, அம்மத    ங்களால் விளையும் தீங்கு புலனாவதாகும். அது நோக்கியே அறிவுடையோர் அனைவரும் வேதத்தை உடன்பட்டு ஒழுகினர் என்க.

        ‘அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய்
        நின்றது மன்னவன் கோல்’            (குறள் - 543)


        ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
        காவலன் காவான் எனில்;’            (குறள் - 560)


என்பவற்றால் திருவள்ளுவ நாயனாரும் வேதத்தை உடம்பட்டமை புலனாகும். ‘வேதத்தில் அறம் எல்லாம் உள’ என்றதனால்  வேதம் அறத்தைக் கூறும் ‘பொதுநூல்’ என்பது பெறப்பட்டது.”

- எனது விரிவாக எழுதியிருப்பதைக் கொண்டு சைவத்தின் நிலைப்பாட்டை உணரலாம். பார்ப்பனரின் முதல் தொழில் ‘வேதம் ஓதுதல்’ ஆகையால், வேதத்தை ‘அந்தணர் நூல்’ என்றார்கள். வேதத்தில் அறங்கள் உள்ளமையாலும், அதிகாரம் பெற்று யாவரும் ஓத உரிமை உடையது ஆகையாலும் ‘பொது’ என்றனர்.

சிவத்தை நோக்கியதே வேதம்

    மேலே காட்டிய புறநானூற்றுப் பாடல், ‘வேதம், இறைவனின் வாக்கைவிட்டு நீங்காதது’ என்கிறது. வேத வேள்விகள் அவ்விறைவனை நோக்கியனவே என்ற குறிப்பும் அப் பாடலில்உள்ளது. திருஞானசம்பந்தப் பெருமான் ‘நல் இருக்கு மந்திரம் கொண்டு, ஒன்றி’ வழிபாடாற்றுதல் பற்றிக் கூறியுள்ளார்.
இருக்கில் பெருமான் இருக்கும் நிலையறிந்துதானே அவர் இருக்கு மந்திரங்கள் இறைவனை வழிபட உரியன என்றார்! அப்பரடிகள்  ‘இருக்கு நான்மறை ஈசனையே தொழும் …. கருத்தினை அறியார் கல்மனவரே’ என்று அருளினார். நான்கு வேதங்களும் சிவனையே தொழுகின்றன என்றதனால் அதனுட்பட்ட வேள்விகளும் மூல முதலாம் அவனையே அடைகின்றன் அவற்றிற்கான பயனளிப்பவனும் அவனொருவனே என்றாராயிற்று. உண்மை இவ்வாறிருக்க ‘வேதத்தில் சிவனே இல்லை’ என்பது எப்படிப் பொருந்தும்?


    அருட்பெருங் கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள், ‘இறைவன் தாம் அருளிய வேதத்தில் தம்மையே புகழ்ந்து கொண்டது, தற்புகழ்ச்சி ஆகாது ; தம்மை ஒப்பார் பிறர் யாரும் இல்லாமையால், தம்மை அறிவிக்கும் உரைகளே அவை’ என்றார். அப்பனுவல் பகுதி வருமாறு:-

        ‘எழுதாக் கிளவி, நின் மொழி, எனப் படுதலின்
        நின், பெருந் தன்மை நீயே நவிற்றுதல்
        மன்பெரும் புலமைத்தன்றே; உம்பரி ன்
        நின்னோர் அன்னோர் இன்மையின், நின்நிலை
        கூறாய் நீஎனில், தேறுநர் இலரால !!!!
        தன்னுடைய ஆற்றல் முன்னார், முன்னர்த்
        தற்புகழ் கிளவியும் தகும் ; என்று, அம்ம!
        நின்புகழ்ந்து இசைத்தனை நீயே!

    (எழுதாக் கிளவி - வேதம் ; நின்மொழி - தாங்களே அருளியவை; நவிற்றுதல் - சொல்லுதல்;;;; மன் - நிலையான் உம்பரி ன் - தேவர்களில்; நின்னோர் அன்னோர் - உமக்கு ஒப்பானவர்; தேறுநர் - தெளிவடைபவர்கள்; முன்னார் - கருதார், அறியாதார்; தற்புகழ் கிளவி - தற்புகழ்சி வார்த்தைகள்; அம்ம - வியப்பிடைச் சொல் ; இசைத்தனை - உரைத்தருளினீர்.)   

வேதம் மொழிபெயர்ப்பா?



    வேதம் சூட்சுமமானது. இறைவனே வந்து விளக்கினால் அன்றி அதன் நுண்பொருள் முற்ற உணர முடியாதது. வேத மந்திரங்கள் நாதமாக மாறிப் பயன்தருபவை.

    பொருள்புரியாததைக் கொண்டு வழிபாடுகள் - வேள்விகள் செய்வதா? என்பது இன்று சிலரின் வாதமாக உள்ளது. நோய் தீரவும், ஆரோக்கியம் பெறவும் மாத்திரைகள் உட்கொள்ளும் நாம், அவற்றில் என்னென்ன மூலப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன? ஆவை எவ்வாறு வேலை செய்கின்றன? என்று அறிந்த பிறகுதான் உட்கொள்வேன் என்று அடம்பிடிப்பதில்லையே!

    ‘வேதம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது’ என்றும் ஓரிருவர் கற்பனா வாதம் வைப்பதுண்டு. அப்படி என்றால் இறைவனே மொழி பெயர்த்தானா? எந்த ஒரு மொழிபெயர்ப்பிலும் மூலத்தின் முழு அழுத்தமும் மூலத்தின் முழுச் சுவையும் இருக்காது. வேதத்தை ஆராய்ந்த எவரும் அது மொழிபெயர்ப்பு என்று ஐயப்பட்டதுமில்லை.

    ஐரோப்பியரும் மேலை நாட்டினர் பலரும் இன்னமும் வேதத்தை ஆராய்ந்து அதன் நுட்பங்களை வெளிக் கொணர்ந்த வண்ணமிருக்கிறார்கள். அதன் மந்திர சக்தியைக் கிறித்தவர்கள் மலிந்த அமெரிக்க மாகாண சபைகளில் ஒலிக்கச் செய்கிறார்கள். வேத ஆராய்ச்சிக்கென்றே பல்கலைக் கழகங்கள் உள்ளன. வேத நுணுக்கங்களை அறிவதற்காகவே உலக நாடுகள் பலவற்றிலும், பல்கலைக் கழகப் பாட மொழியாகச் சமஸ்கிருதத்தை வைத்துள்ளனர். இந்திய நடுவணரசு சமஸ்கிருதத்தை முக்கியத்துவம் கொடுத்து அதனைச் செம்மொழி என முதலில் அறிவித்தும், பேசுமொழியாக்க முயல்வதும், அதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்வதும் அம்மொழியில் வேதம் இருப்பதாலேயே என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?

    அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற தத்துவ அறிஞரும், எழுத்தாளரும், சமூக விமர்சகரும் ஆகிய nஉறன்றி டேவிட் தோரா (1817-1862) ‘வேதங்களில் ஏதாவது ஒரு பகுதியை நான் படிக்கும்போது, தெய்விகமான - இதுவரை அறிந்திராத ஒளி என்னுள் வெளிச்சம் தருவதை உணா;கிறேன். வேதங்களின் ஒப்பற்ற போதனையில் பேதம் இல்லை. அது அனைத்து வயதினருக்கும், பிரதேசத்தினருக்கும் நாட்டினருக்குமானது. அது பேரறிவை அடைவதற்கான பெருவழி. அந்த வழியில் செல்லும்போது, கோடைக்கால இரவில் நட்சத்திரங்கள் ஒளிரும் வான்வெளியின்கீழ் இருப்பதைப் போல உணர்கிறேன்’ என்றார்.

    ‘மிகத் தூய்மையான வடிவில், நிலையான உண்மையை எடுத்துரைப்பவை வேதங்கள்தாம்; அவைதாம் என்னை முதன் முறையாக இந்தியாவுக்கு வரச்செய்தன் இங்குத் தங்கும்படிச் செய்தன’ என்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் பால் வில்லியம் ராபர்ட்ஸ். இப்படியான வெளிநாட்டறிஞர்களின் புகழுரைகளைத் தொகுத்தால் வேதம் அளவுக்கு விரிவாக அமையும். ‘இருப்பவர்கள் அள்ளி முடித்துக்கொள்கிறார்கள்’

    வேதத்தைப் பற்றிய புகழுரைகளில் வேத உடன்பாட்டுச் சமயமாகிய சைவத்திற்கும் பெருமை உண்டு என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

    நான்மறைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முன்பொரு காலத்தில் தமிழகத்தில் சிலராக இல்லாமல், சிலபலராக இருந்தார்கள். அவர்களைப் புறப்புறச் சமயிகள் என்றே சைவம் ஒதுக்கியது. அந்தப் புறப்புறச் சமயிகளின் வேத மறுப்புக் கொள்கையை, சைவத்துக்குள்ளேயே புகுத்த முயற்சிக்கும் விபரி தம் முன்னெப்போதும் நடந்ததில்லை. 
 
சைவர்களிடம் வேதமறுப்பு என்பது சேருமானால், வேத உடன்பாட்டுத் திருப்பனுவல்களைக் கொண்ட தேவாரங்களையும் - திருமுறைகளையும் மறுப்பதாகும் ; வேத மறுப்புத் கொள்கை என்பது, புறப்புறச்சமயக் கொள்கை என்ற மெய்கண்ட சாத்திரங்களையே மறுப்பதாகும்.

திருமுறைகளையும் மெய்கண்ட சாத்திரங்களையும் மறுத்த பிற்பாடு, சைவம் என்பது எதிலே நிற்க முடியும்?
வேதத்தை மறுப்பதுடன், திருமுறைகளில் அப்படியெல்லாம் சொல்லவில்லை; வேத மந்திரங்கள் உள்ளிட்ட ஆகம மந்திரங்களைப் பின்பற்ற அறிவிக்கவில்லை என்று முழுப் பூசணிக்காயைக் கைப்பிடி சோற்றில் மறைக்க முற்பட்டால், முன்பெழுதியவண்ணம் உலகமே ஏற்ற வேத உண்மைகளை உளங்கொள்ள முயலாத அவர்களை நினைக்கும்போது,

‘உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துள்
ஆலகையா வைக்கப் படும்’


என்ற குறள் நினைவுக்கும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வேதப் பயனாம் சைவம்


    நம் சித்தாந்த சாத்திரங்கள் அறிவியல் நெருங்க முடியாத கூறுகளையெல்லாம் நெருங்கித் தெளிவு செய்து காட்டும் பேரறிவியலாகும். மெய்ப்பொருளியலாம் இச் சாத்திரங்கள் வேதோக்தமானவை; வேதத்தை உடன்பட்டுப் போற்றுபவை. தேவாரங்களும் வேதசாரமானவை. இது பற்றியே சைவம் ‘வேதப்பயன்’ எனப்படுகிறது. சைவத்தின் தலையாய பஞ்சாக்கரத்தை ‘வேதம் நான்கினும் மெய்ப்பொருள்’ - அதாவது நான்கு வேதங்களிலும் சத்தியமானதாகவும், தத்துவமானதாகவும் இருப்பது - என்று தேவாரம் அறிவித்துள்ளமை, சைவத்தின் வேத சம்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது.
    ‘இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மேம்பட்டது’ என்றார் ஜி.யு.போப். ‘சைவ சித்தாந்தம் இந்திய சிந்தனைகளதும் உணர்வினதும் சிகரம்’ என்றார் கௌடி (இந்திய தத்துவ ஞானம், பக். 403). இப்படிப்பட்ட சித்தாந்தங்களைச் சொல்லும் மெய்கண்ட நூல்களை, அவற்றின் ஆதார நிலைக்களன்களாகிய திருமுறைகளை உலகப் பல்கலைக் கழகங்களின் ஆய்வுகளுக்கு உட்படுத்த ஓர் அடிகூட முன்னெடுத்து வைக்க முயலாமல், கோயில் பூசைக்கும் புரோகிதத்திற்கும் வேள்விக்கும் பயன்படுத்தப் புறப்படுவதை, நடுவுநிலைப் பார்வையுடன் பார்த்தால்,

    ‘செய்தக்க அல்ல செயக்கெடும் ;  செய்தக்க
    செய்யாமை யானும் கெடும்’


என்ற குறள்தானே நினைவுக்கு வருகிறது.

    வேதத்தின் மிகப்பல பகுதிகள், வடமொழியிலும் தமிழிலும் வல்ல புலவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளனவே !  வடமொழி வேதம் புரியவில்லை என்பது மட்டுமே கருத்தானால், அம் மொழிபெயர்ப்புகளை, ‘நம்மிடமிருந்து வடமொழிக்குப் போனவை நம்மிடமே வந்துவிட்டன’ எனக் குதூகலித்துக் கொண்டாடாலாமே !


    சிவாகமங்களில் நம் திருக்கோயில் அமைப்பு, நித்திய, நைமித்திக வழிபாட்டு நெறிகள்,வேள்விகள், மந்திரங்கள், கிரியைகள், வாழ்க்கை வைபவச் சடங்குகள் யாவுக்குமான செய்ம்முறைகள் உள்ளன. சிலர் இவற்றையொல்லாம் ‘தமிழிலேயே செய்ய வேண்டும்’ என்பதைக் காட்டிலும், ‘நானே செய்ய வேண்டும்’ என்பதில்தான் அதிகமாக ஆசைப்படுகின்றனர்.


    ‘எனதுரை தனது உரையாக’ என்றபடி, பெருமான் உள்நின்று உணர்ந்த, ஒளிநெறித் தமிழ்ப் பனுவல்களாக முகிழ்த்தவை,
நால்வர் பெருமக்களின் திருவாக்குகள், அவற்றைத் ‘திருநெறிய தமிழ்’ என்று போற்றி, உச்சி மீது வைத்து நாம் துதிக்கிறோம். வேத மந்திரங்களும், ஆகமமந்திரங்களும் கிரியைகள் வழியாக இறைவனைச் சென்றடைந்து பயன்தரச் செய்கின்றன. அதனால் அவை ‘மந்திரங்கள்’ என்ற தகுதி உடையன. நால்வர் பெருமக்களின் ‘அருள்பழுத்த கனிகள்’ கிரியைகள் வழியின்றி, நேரே இறைவன் திருச்செவி அடைந்து, அனைத்து நலன்களும் பெற்றுத் தருபவை. ஆகையால் இவை ‘பெருமந்திரங்கள்’ என்னும் உயர்தரம் உடையன.

    இப்பெருமந்திரங்களை, மந்திரங்களுக்கு உள்ளது போல் கிரியைகளில் வைத்தால், தரம் குறைந்ததாகத்தானே ஆகும்?  திருநெறிய பெருமந்திரங்களாம் தோத்திரங்களை - ஓதிய மாத்திரையிலேயே பயன்பெற்றுத்தரவல்ல அதியற்புதப் பெரு மந்திரங்களை - கிரியைகளில் இறக்கிவிடுவதாகிய செயலாதிருமுறைப்பற்று?

    மந்திர உச்சரி ப்புகளை, இடம் மாற்றிச் சொன்னால் நகைப்புக்குரியதும் விபரி தமும் ஆகும். அங்க நியாசங்களில் ‘ஈசான மூர்த்தயே நம:’ என்று உச்சந்தலையைத் தொட்டுச் சொல்ல வேண்டும். ‘அப்படி ஏன் சொல்ல வேண்டும்? நான் சிரலைத் தொட்டு ‘அகோர உறிருதயாய நம:’ என்றுதான் சொல்வேன்’ என்றால், அதை வக்ரபுத்தி என்பார்கள். அது மந்திர அவமதிப்பு. அதனால் எதிர்பலன் நிகழும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.

    வழிபாட்டின் தொடக்கத்திற்கே இவ்வளவு பிகுத்தமான விதிகள் உள்ளன என்றால், வழிபாட்டில், வேள்வியில், குடமுழுக்க முதலிய நிகழ்வுகளில் மந்திரங்களைச் சொல்ல வேண்டிய இடங்களில், பெருமந்திரங்களாம் திருமுறைகளைத் தரம் இறக்கி - இடம் மாற்றிச் சொல்லவது எவ்வளவு விபரி தமானது என்பதைச் சைவப் பெருமக்கள் அறிந்துகொள்வதுடன், அறியாதவர்களும் அறிவுறுத்தியும்.
அறிந்தும் அறியாதவர்போல் நடிப்பவர்களுக்கு விளங்குமாறு விளக்கியும், நம் உயிர்ச் சைவத்திருமுறைகளின் உச்சப் பெருமைகள் கொச்சைப்படுவதைத் தவிர்த்தாக வேண்டும்.

    திருக்கோயில் வழிபாடு பரார்த்த வழிபாடாகும். உலக நலன்கருதிய அவ்வழிபாடு எல்லாத்தரப்பினருக்கும் - சகலருக்கும் ஆனது. ஆகவே அங்கே கிரியைகள் தேவை. ஆகம மந்திரங்களால் கிரியைகளை நிகழ்த்தி -அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, நைவேத்யம் நிகழ்த்தி - அடியார், பக்தர் செவிக்குக் கேட்கும்வண்ணம், சகலரும் தூய்மையும் நன்மைகளும் பெறுதற்பொருட்டுத் திருமுறைகளைப் பண்ணோடு இசைக்கும் மரபு, காலம் காலமாக உள்ளது. இந்நிகழ்வில் பெருமந்திரங்கள் அடியார்கள் செவிவழி மனத்திற்குச் சென்று பதியவேண்டும் என்பதனால் வாத்திய முழக்கம், மணியோசைகள் நிறுத்தப்படும். இச்சமய மரபுகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள மறுத்துக் குணம்பண்ணும் அருள்ஞானக் குவியல்களைப் பணம் பண்ணும் பாதையாக வெட்டி நிரவ முயல்வது, சமயக் கட்டுப்பாட்டை மீறும் - ஆன்றோர் வாக்கு, சமயாசாரியர், சந்தானாசாரியங்கள் ஆணைகளை மீறும் - அதிக்ரமங்களே ஆகும்.

ஆகமங்களின் கர்த்தா இறைவன் ;  வேதத்தின் பொருளே இறைவன்!

    ‘மறையுமாய், மறையின் பொருளுமாய் வந்து என்
    மனத்திடை மன்னிய மன்னே’


என்பார் மாணிக்கவாசகர். மறைந்த பொருளுடைமையின் ‘மறை’ என்று பெயர் அமைந்தது. (காண்க - தொல். எழுத்து. பாயிரம். நச்சினார்க்கினியர் உரை) வேதத்தை அருளியவேத வடிவானவனே, வேதத்திற்குப் பொருளாக மறைந்தும் உள்ளான் - இது அவ்விறைவனே வந்து உபதேசிக்கப் பெற்றவரிடம் இருந்து வந்து அனுபவ அறிவிப்பு. திருவிளையாடற் புரணாத்தில்

உள்ள வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்த படலத்தின் சாரமும் இதுவேயாகும். ஆகவே “வேதத்திற்குப் பொருள் தெரியவில்லை அதனால் அது வேண்டாம்” என்று ஒருவர் சொன்னால், “சிவபெருமான் எனக்குப் புலப்படவில்லை; அதனால் சிவம் தேவையில்லை” என்று சொன்னதாகத்தானே ஆகும் !

    மாமரம் பாதுகாக்கப்படுமானல், அதன் பயனாக மாங்கனிகளைத் துய்க்கலாம். ‘சைவம், வேதப்பயன்’ - வேதம் பழமரம். அதன் பயன் சைவம். மரம் கூடாது ; கனி மட்டும் வேண்டும் என்பதைச் சாத்தியக் கூறுடைய வாதம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இத்தகு பொருந்தாவாதம் செய்பவர்கள்,


‘மிருதி புராணம் மற்றும் எல்லாம் மெய்ந்நூலின் வழி, புடை நூலாம்”


என்னும் சித்தியாரையும் வெறுப்பர் போலும் !  

மன்னர்களின் மனவேட்கை

    தேவாரங்கள் தோன்றி காலத்திற்குப் பின்னர் இறை திருக்கோயிக்ள் கற்றளிகளாக மாறின. சுடுமண் கற்களால், மரங்களால் அமைந்த கோயில்கள், கருங்கற்களால் வடிவம் அமைக்கப்பட்ட நிலையே கற்றளிகள். முன்புபோலவே, ஆகம விதிப்படியே மன்னர்கள் அவற்றைக் கற்றளிகளாக வடிவமைத்தனர்.

    சமணம் போன்ற புறப்புறச்சமயங்கள், கலைகளை வெறுத்த சமயங்கள், நம்பெருமான் ஆடல்வல்லான்;  கலைகள் ஆயவல்லான் ;   சக்தியை உள்ளக்கிழியின் உருவெழுதிய ஓவியன் ; 

திருமுகப்பாசுரம் முதலியன படைத்த பெருமான், கவிதைக் கலைக்கு மூலமானவன் ;   மண்ணில் நல்ல வண்ணம் வாழ மகிழ்கலைகள் எல்லாமும் தேவைதாம். ஆகையால், சைவம், கலைகளை உள்ளடக்கியதும், மக்கள் தொண்டை உள்ளடக்கியதும் ஆகிய பெரும் சமயமாக ஆதிமுதல் விளங்குகிறது. சைவத்தின் இவ்வியல்புகளுக்கும் இடம்தர வேண்டும் என்பதைக் கற்றளிகளாக அமைக்கும்போது, மன்னர்கள் கவனத்திற்கொண்டு கற்றளிகளை விரிவாக அமைத்தனர்.

    அக்கற்றளிகளில் ஆகம பூசைகள், முன்பு நடந்தது போலவே, பிறழ்ச்சியின்றி நடைபெற நிலதானங்கள் முதலியன அளித்துக் கல்வெட்டுகள் பதித்தனர் நம் மன்னர்கள். எல்லாக் காலங்களிலும் திருக்கோயில்களில் ஆகம வழிபாடுகளே நிகழ்ந்தன என்பதற்கு வரலாற்றுப் பெருங்காப்பியமாகிய பெரியபுராணத்தில் பல சான்றுகள் உள்ளன. பின்னர்வந்த தலபுராண நூல்கள் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.

    நன்கொடையாளர்களின் நோக்கம் (னுழழெச’ள iவெநசவெழைn) எதுவோ அதை மாற்றுவது சட்டப்புறம்பான செயலாகவே கருதப்படும். இன்றை சட்டத்திலும் இவ் விதியுள்ளது. மன்னர்கள் சைவ சமயத்தினருக்காகப் பெரும் பொருட் செலவில், “பெரும்பொருட்கிளவியான்” பெயரில் ஆக்கியளித்த நன்கொடைகளே திருக்கோயில்கள். ஆக்கி அளித்தோரின் நோக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, திருக் கோயிலை வெறும் சொத்தாக மட்டும் பார்ப்பது ஒருவகை ஏய்ப்புத்தானே !


    தொல்லியல் துறைக்கு உட்பட்ட கோயில்களில், ஒரு சிறுமாற்றம் செய்வதற்குக்கூடச் சட்டம் இடம் கொடுப்பதில்லை. ஆனால், ‘உள்ளே நடக்கிற பூசையை மட்டும் மாற்றிக்கொள்கிறேன்’ என்றால் அந்தச் செயல் ,
‘பழமையை மாற்றுதல்’ என்ற தலைப்பில்தானே அடங்கும். சான்றாக ஒன்றைப் பார்ப்போம். தஞ்சைப் பெரியகோயில், 28 ஆகமங்களில் ஒன்றாகிய மகுடாகம் விதிப்படிக் கட்டப்பட்டது ஆகும். அங்கு, மகுடாகம் விதிப்படியாக பூசைகளை உரியன ;   திருவாரூர்க் கோயிலுக்கும் மகுடாகம் விதிகள் உரியன ;   தஞ்சைக் கோயிலில்,

            ‘…………………………………… - பாண்புமிகு
            ஆதிசைவர் நீடு மகுடாகத்தில் ஆரணத்தில்
            ஓதுஇசையில் செய்பூசை உட்கொண்டு’ (கண்ணி.23)

விளக்குதலைத் தஞ்சைப் பெருவுடையார் உலா, தெரிவிக்கின்றது. இது பழமைதானே !  இதை மாற்றுவதற்கு விரும்பினால் தொல்லியல் சட்டத்தை, இரட்டை வேடம் போடும்படி வற்புறுத்துவதாகத்தானே அமையும்.


    தொகுமொத்தமாகப் பாh;த்தால் ‘மன்னர்கள், ஆகம வழிப்பட்ட பக்திமார்க்கத்தை உடையவர்களே அவர்களின் நோக்கத்தை மாற்ற நமக்கு உரிமையில்லை’ என்பது பெறப்படும்.

தமிழ்ப் பற்று


    தமிழைக் காத்து வளர்த்த பெருமையுடையது நம் சைவம். பெருமானும் முருகக் கடவுளும் முதற் சங்கத்திருந்து தமிழாய்ந்தனர். சங்க இலக்கியங்கள் சிவனை ஒருபெருங் கடவுளாக வருணிக்கின்றன. அதனால் சங்கப் புலவர்களில் மிகப் பலர் சைவர்கள் என அறிகிறோம். பெருந்தேவனார் மற்றும் நல்லத்துவனாரின் சிவ வணக்கப் பாடல்கள் சங்க நூல்கள் நான்கின் கடவுள் வாழ்த்துப் பாடல்களாகவிளங்குகின்றன. எட்டுத் தொகை நூல்களுள் முதல் நூலாகிய நற்றிணையின் முதல் பாடலாகிய சிவ வணக்கப் பாடல், சிவனை ‘வேத முதல்வன்’ என்கிறது.

பௌத்தர்கள் பெருக்கத்தால் பாலிமொழி பரவ இருந்த சூழலில், தமிழ்மொழி மங்காமல் ஒளிரச் செய்த பெருமை திருமுறை ஆசிரியர்களுக்கு உண்டு, ‘நான்முறை கற்றவன் காழியர் மன்னன்’ ஞானசம்பந்தப் பெருமான், தம்மைத் ‘தமிழ் ஞானசம்பந்தன்’ எனக் குறிப்பிட்டுக் கொண்டார்.


    நம் சைவம், தோத்திர வழிபாட்டுக்குத் தமிழையும், கிரியை வழிபாட்டுக்கு வடமொழியையும் கொண்டதாகும். கிரியை வழிபாட்டை வடமொழியில் நிகழ்த்தும் மரபு, நம் தமிழ்ப் பற்றை எவ்விதத்திலும் குறைக்காது. வுடமொழி கிரியைகட்குக் கருவி மொழி. அது பேச்சு வழக்கிற்கு உரியதன்று.

    இறைவன் அருளிய இரு மொழிகளில் நாம் தாய்த் தமிழின் பேரில் பற்றும், வடமொழியின்பேரில் மரியாதையும் உடையவர்கள். பற்று, உள்ளுணர்ச்சியினால் ஏற்படும் இதயப் பதிவு. அதுவே மேலோங்குவதாகும். பண்பாட்டு அடிப்படையிலும் மரபு அடிப்படையிலும் எழும் மரியாதை, பற்றை ஒருபோதும் குறைப்பதில்லை.

அற்புதங்கள் மரபாவதில்லை


    சமயாசாரியர்களின் திருவாக்குகள் இறைவன் உணர்த்த வெளிவந்தவை என முன்பும் எழுதினோம். இறைவன் அருளிய ஆகம மந்திரங்களால் இறைவனைப் பூசித்து, இறை வாக்குகளேயாகிய தேவாரப் பனுவல்களாலும் - திருமுறைப் பாக்களாலும் அப்பெருமானைத் துதிப்பதே சைவத்தின் பாரம்பரி யப் பெருமையாகும். இவற்றிலெல்லாம் குதர்க்க வாதங்களோ, குழு தர்க்க வாதங்களோ, வேண்டாத வாதங்களோ, விதண்டா வாதங்களோ எழத் தேவையே இல்லை.
‘கண்ணப்பர், நம் சமய மரபுப்படி பூசிக்கவில்லையே! என்று கேட்கலாம்? சிவகோசரி யார் ஆகம மந்திரங்களால் பூசித்து இறை சான்னித்தியத்தை நிலைநிறுத்தியிருந்த அருவுருவத் திருமேனியைத்தான் கண்ணப்பர் பூசித்தார். ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பில்லை’ என்பது முடிந்து முடிபு. ‘ஆகமம் சமஸ்கிருத மொழிலுள்ளது, எனக்குப் புரியவில்லை” என்று முழக்கமிட்டோ, அறிக்கைவிட்டோ, கூட்டம் கூட்டிப் பேசியோ அவர் பூசை முறையை மாற்றவில்லை. ‘அடைக்கும் தாழ் இல்லாத அன்பு’ வௌ;ளம் பெருக்கெடுத்த நிலையிலி இப்பூசை நிகழ்ந்தது. அந்த ஆறு நாட்களுக்குப் பிறகு இன்றுவரை காளத்தியில் ஆகம பூசையே தொடர்கிறது; தொடரும்.

    பூசையில் ‘நைவேத்யம்’ என்பது ஓர் அங்கம். ‘நைவேத்யம்’ என்ற சொல்லுக்குக் ‘காட்டுதல்’ என்பது பொருள். நம்பியாண்டார் நம்பிகள், பொல்லாப் பிள்ளையாருக்கு உணவைக் காட்டவில்லை உண்ணச் செய்தார். கண்ணப்பர் செயல், அன்பின் பெருக்கம் என்றால், நம்பியாண்டார் நம்பிகள் செயல், பக்தி வைராக்கியம். இந்த அற்புதங்களை இனி ஒருபோதும் யாராலும் நிகழ்ந்த முடியாது. அற்புதங்கள், மரபாக வேண்டுமானால் இறைவனைப் பூசிக்கும் அத்தனைபேரும் அவர்களையொத்த பேரன்பும், வைராக்கியமும் கொண்டு தனிப்பெரும் அருளாற்றல் பெறவேண்டுமே!

    ஆகம பூசை வேண்டாம் என்பதற்கோ, மரபு மீறிப் பூசிக்கலாம் என்பதற்கோ இவையெல்லாம் எப்படி ஆதாரமாக முடியும்?


இன்றைய நிலை

    பக்தி மார்க்கம் தற்காலத்தில் வளர்ச்சி நிலையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாத்தி கவாதம் சற்றே தணிந்து கொண்டு உள்ளது என்றுதான் கூறவேண்டும். சைவ, வைணவ பேதமற்ற ஒரு பக்திச் சூழல் மேலோங்கி வருகிறது.
    சைவ சமயத்தின் சில அடித்தளக் கோட்பாடுகள் மதிக்கப்படாமல் ஆங்காங்கே நிகழும் ஒருசில நிகழ்வுகள் விரும்பத்தகுவன அல்ல.

    தெய்வத்திருமுறைப் பனுவல்களுக்குத் தாம்தாம் கருதிய பொருள்களை வலிந்து ஏற்றிக் கூறி மரபுகளைச் சிதைக்கும் போக்கு நம் சமயத்தின் வைதிகப் புனிதத்துவத்தைக் களங்கப்படுத்திவிடும். பரார்த்த வழிபாட்டுக்குரியதான திருக்கோயில்களில், அடியார்கள் எல்லாரும் சென்று தாமே பூசித்தாh;கள் என்று கூறுவதும், அதற்குத் திருமுறைத் தொடர்களின் பொருள் மாற்றி மேற்கோள் சொல்வதும், திருமுறைத் தொடர்களை ஓதுதல் செய்வதைத் தவிர்த்து அருச்சிக்கப்பயன்படுத்துவதும் ஆகம விரோதச் செயல்களாகும்.

    சிவாகமங்களுடன் மாறுபடும் விதிகளை ஆகமங்களாகக் கொண்டு சில வழிபாடு செய்த பாசுபதர், மாவிரதியர், காபாலிகர், வாமநெறியினர், வைரவ நெறியினர், ஐக்யவாத சைவர் என்ற ஆறு பிரிவினரை - அகப் பிரிவினரைச் சைவத்தின் உள்ளேயே புகுந்து குழப்பம் செய்தவர்கள் என்ற பொருளில் ‘அகப்புறச் சமயிகள்’ என்று பெயரிட்டு, நம் சாத்திர நூல்கள் நிராகரணங்கள் - மறுப்புரைகள் - எழுதியுள்ளன. பரம கருணையங் கடவுளாகிய நம்பெருமான் அந்த அகப்புறச் சமயங்கள் இருந்த இடம் தெரியாதபடி, ஒடுக்குதல் என்ற கிருத்தியம் செய்து சைவத்தைக் காத்துப் புரக்கிறார் என்பதை உற்றறிந்து அகப்புறச்சமய வேலைகளை இனியும் யாரும் மேற்கொள்ளல் ஆகாது என எச்சரி க்கையாக இருக்க வேண்டும். அதாவது ஆகம நெறிகளை மாற்றுதலாகாது. திருவாசகம் வீடுபேற்றையே கருதி ஓதப்பெறுவது என்னும் சைவக் கோட்பாட்டையும் சிதைக்கலாகாது.

    பெண்களும் கோயிலில் சென்று பூசிக்கலாம் என்ற ஒரு முழக்கம் திரும்பத்திரும்ப வருவதைக் கேட்கிறோம். பெண்கள் பக்தி வேட்கை மிக்கவர்களாகவும், எதை யார் சொன்னாலும்.
நம்புபவர்களாகவும் இருப்பதைக் கொண்டும், பெண்கள் சேரும் பக்கம் வெற்றிப்பாதையாக அமைகிறது என்பதாலும் திருவள்ளுவர் கூறும் ‘வாழ்க்கைத் துணை நலம்’ பற்றி எண்ணிப்பார்க்காமல் இப்படியான உத்தியினைக் கையாள்கிறார்கள்.

    மேல் மருவத்தூர்க் கூட்டம் கண்களை உறுத்துவதும் அதற்கொரு காரணம் எனலாம். அது சாக்தம் சார்ந்த வழிபாடு. அவர்களில் யாரும் ஆகமப் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பாள் கோயிலில் நுழைந்து பூசிக்க முற்படுவதில்லை. பிரம்ம குமாரிகள் பூசை உலகளாவிப் பரவி வருகிறது. அது திருக்கோயில் வழிபாட்டு முறைமையன்று. எந்தத் துவேஷமும் இல்லாதது. வேதாந்தச் சார்புடையது. கூட்டு வழிபாட்டு முறை. பக்தி நெறி தழைத்துச் செழிக்க அவையெல்லாம் சரி யே.

    இன்றும், நம் சைவத்திலும் பல பெண்கள் சிவதீட்சை பெற்றுச் சிவபூசைகளைச் சிரத்தையுடன் செய்கிறார்கள். ஆதீனகர்த்தர்கள் தீட்சை கொடுத்துப் பூசை எடுத்துக் கொடுக்கும் முறை அனுமதிக்கப்பட்டதே. வரவேற்கத்தக்கதும்கூட. சிவதீட்சை பெற்றுப் பூசை செய்வது ஆன்மார்த்தம். கோயில் பூசை ஆகமோக்த பரார்த்தம். சிவாசாரியர் மரபில் வந்தவராயினும் பெண்கள் திருக்கோயில் பூசைக்கு உரியரல்லர்.

    ‘தாடகை’, என்பாள் யட்சஸ்திரி. அவள் மானிடப் பெண் அல்லள். அவர்கள் - வானிடத்தவரும் அவர்கள் முறைப்படி மண்மேல் வந்து அரனை அர்ச்சிப்பர் என்று சிவஞான சித்தியார் கூறுகிறது. இதனால்தான் அர்த்தஜாம பூசைக்குப் பிறகு மூலஸ்தானத்தில், நடை அடைப்பது தொடர்ந்து வருகிறது. அர்த்த ஜாமத்துக்கு மேல் வானிடத்தவரும் சிவனார் கோயிலில் வழிபாடு நிகழ்த்துவர். அனுமதிக்கப்பட்ட வேளையிலே தேவலோக மலர்களைக் கொண்டு வனையப்பட்ட மாலையை எம் பெருமானுக்கு தாடகை சூட்டவந்தபோது அவள்ஆடை
நெகிழ எம்பெருமான் சாய்ந்து அதனை ஏற்றுக்கொண்டது அப்பெருமானின் தனிப்பெருங் கருணையைத் துல்லியமாக விளக்குகிறது. இதற்கு விபரி தப் பொருள் தருவது அடாது.

    எறும்பு பூசித்த தலம் ‘திருஎறும்பியூர்’ எனப் பெயர் பெற்றது. யானை பூசித்த தலம் ‘திருஆனைக்கா’ எனப் பெற்றது. அவைபோலத் தாடகை பூசித்த தலம் ‘தாடகை ஈச்சரம்’ எனப் பெற்றது.

    ‘வரும் இவள் நம்மைப்  பேணும் அம்மை’ என இறைவன் உமாதேவியாரிடம் காரைக்காலம்மையாரைத் தம் தாய் என அறிமுகம் செய்தார். மூத்த திருப்பதிகம் பாடிச் சைவத் தேவார அமைப்புக்குப் பிள்ளையார் சுழிபோட்ட அந்தப் பெருமாட்டி, ‘அரவா, நீ ஆடும்போது நான் மகிழ்ந்துபாடி உன் அடியின் கீழ் இருக்க’ வரம் பெற்றார்களேயன்றி, அருகிருந்து பூசிக்க வரங்கேட்கவில்லை.

    ‘உமையம்மையே கம்பை நதியில் பெருமானைப் பூசிக்கவில்லையா?’ என்பவர்கள், உமையைப் பால்பகுப்பில் அடக்குவது உபசாரம் என்பதையும், நம் மெய்ப் பொருளியல் படியாகச் சக்தியின் நிலையும், இடமும் இன்னது எனவும் முதலில் அறிதல் வேண்டும். பவன் பிரம்மசாரி பால்மொழி கன்னியாகும் என்ற சிவஞான சித்தியார் வாக்கை ஆழ்ந்து நோக்க வேண்டும். பௌராணிகமாகப் பார்த்தாலும், ‘வாக்கே நோக்கிய மங்கை’ யாகிய பதிசொற் படிகடவாப் பரமேஸ்வரி, பெருமானின் உத்தரவுப்படியே இறை திருவிளையாடற்காக இது நிகழ்த்தினாள் என்பதையும் உணர்தல் தகும்.

 தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறெம் மாநிலத்திலும் இறைவன் அருளிய வடமொழிப் பூசை கூடாது எனச் சொல்வதும், மாநில மொழியில் பூசிக்க வேண்டும் என்பதும் இல்லை.
பிறமொழி வெறுப்பு என்ற குறுக்குவழி விளம்பர உத்தியால் தமிழகம் இழந்த இழப்புகள் எண்ணிலடங்கா. எவரொருவருக்கும் தாய்மொழியாக இல்லாமல் இறை பணிகளுக்காகவே உள்ள வட மொழியின் பேரில் வெறுப்புக் காரணமாகத் தமிழ்தமிழ் என்பதை, உண்மையான தமிழ்ப் பற்று எனச் சொல்வதற்கு இல்லை. தனி வழிபாடுகளில், இல்ல வழிபாடுகளில், கூட்டு வழிபாடுகளில் திருமுறைகளைப் பண்ணோடு இசைத்து வழிபடுங்கள்.

    வேள்விகள், கும்பாபிஷேகம், திருமணம் முதலிய சடங்குகள், பரார்த்த பூசையாகிய ஆகமப் பிரதிட்டைத் திருக்கோயில் பூசைகள் ஆகியவற்றில் திருமுறைகளை இறக்கி மரபின் மாட்சிக்குக் களங்கம் செய்யாதீர்கள் என்பதை உண்மைச் சைவத் திருநெறியினர்க்கு நாம் வைக்கும் கருத்துரையாகும். தமிழ்ப் பற்று என்பவர்கள் - தங்கள் பெயர், விலாசம், சந்ததிகளின் பெயர் முதலியவற்றை வடமொழியிலேயே வைத்துள்ளதை என்னவென்று சொல்வது?


    தாய்மொழிக்கு வழிபாட்டை மாற்றுதல் என்ற கருதுகோள் முதன் முதலில் கன்னட தேசத்தில் தனியொரு சமயமாக ஆக்கி உருவாக்கப்பட்டது. இதனால் கோயில் வழிபாட்டையே தவிர்த்தனர். கழுத்தில் உள்ள லிங்கத்தைக் கழற்றிவைத்து அதற்கே பூசை செய்வர். அத்தேசத் திருக் கோயில்களிலேயே அம்முறைமை இன்றில்லை. புதிய முகவரி தேட முற்பட்டால் உள்ள முகவரியும் அழிந்துவிடும்.

    பெரியபுராணம் முழுமையிலும் வரும் திருமணங்கள் வேதமந்திரத் திருமணங்களே. தேவாரத்தில் பெருஞ்சாந்தி வருகிறது. அது பூசனைகளில் நிகழ்ந்த குறைபாடுகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிராய்ச்சித்த விழா. குடமுழுக்குக் குறிப்பு, உளக்கோயில் அமைத்த உத்தமர் பூசலார் வரலாற்றில் வருகிறது. அவர் ஆகம வழிப்படியே கோயில் அமைத்துக் கொண்டாராதலின் குடமுழுக்கும் ஆகம விதிப்படியே எனல் கூறாமலேயே பெறப்படும். மாறானால், அது திருமுறை வழியுமன்று, நெறியுமன்று.


        ‘நாதனுக்கு ஆலயம்செய்
            நலம் பெறு நல் நாள் கொண்டே
        ஆதரித்து ஆகமத்தால்
            அடிநிலை பாரித்து”


என்ற பெரியபுராணத் தொடரே சாலும். சண்டேசுர நாயனார் புராணத்தில் ஆகம முறைப்படி கோயில் அமைத்தது உணர்த்தப்பட்டுள்ளது.

    ‘முன்னமே பிள்ளையார்பால் அனுசிதம் முற்றச்செய்து’ பின்னரும் அனல் புனல் ‘ துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற’ சமணர்கள், கொன்னுனைக் கழுவில், தாமே ஏறி மாண்டனர். அங்ஙனம் இறந்த சமணர்கள் நெருப்பில் பொசுங்காத் திருமுறையை, நீரில் போகாத் திருமுறையை - வேள்வி என்ற பெயரில் நெருப்பிலும், குடமுழுக்கு என்ற பெயரில் நீரிலும் இட்டுப் பெரு மந்திரத்தை மந்திரமாகத் தரம் குறைக்கும் அகப்புறச் சமயிகளாக மீட்டுரு எடுத்து வந்தனரோ என்று மனம் கருதத் தலைப்பட்டாலும், நீறு பூசியவா;கள் பகைமையே செய்யினும் ‘நமர்;’ எனச் சொல்லும் நனி நாகரிகத்தைத் தெய்வச் சேக்கிழார் நாமுய்ய வழங்கியுள்ளமையால், எங்கும் இருந்து காணும் பரசிவத்தின் திருவுள்ளம் எவ்வண்ணமோ அதுவே மெய்வண்ணம் என அமைதியுறுகிறோம்.


கேட்டுக் கற்றவர்களின் செயல்கள்


    வேதங்களை ‘ஸ்ருதி’ என்று சொல்வார்கள். ‘ஸ்ரு’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து ‘ஸ்ருதி’ என்ற சொல் உருவானது.
அவ்வேர்ச் சொல்லுக்குக் ‘காதால் கேட்பது’ என்பது பொருள். ‘ஸ்ருதி’ என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் ‘கேள்வி’ என்பதாகும். ‘கேள்வி நூல்;’ என்று வேதத்தையும், ‘கேள்வி அந்தணர்’ என்று வேதியரையும் குறிக்கும் வழக்கம், பன்னெடுங் காலமாகப் பயிலப்பட்டு வரும் இலக்கிய வழக்காகும்.


    வேதம் ஓதுதல், வேத மந்திரங்களால் சடங்குகள் செய்தல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்டவர்களைப் ‘புரோகிதர்கள்’ என்பர். ஆகமங்களால் தேவ காரியங்களையும் சிவ வேள்விகளையும் செய்பவர்களைச் ‘சிவாசாரியர்’ என்பர். இவர்களை ‘ஆதி சைவர்கள்’ என்றும் கூறுவர். இவர்களைத் ‘தேவ கன்மிகள்’ எனக் கல்வெட்டுகள் கூறும். ‘புரோகிதம்’ என்பது தொழில். புரோகிதம் செய்யாமல் வேள்வி செய்தல், வேதம் ஓதுதல் ஆகியன செய்யும் அந்தணர்களும் உளர்.


    வேள்வி செய்ய உரிமையுள்ள இவர்களுள்ளும் திருமணமாகி மனைவியுள்ளவர்களே வேள்வி செய்ய அருகதை உள்ளவர்கள் என்பது யாவரும் அறிந்தது. துறவிகள், வேள்வி செய்விப்போராக, திருமணம் போன்ற நற் சடங்குளில் ஆசீர்வதிப்போராக எழுந்தருள்வார்களே தவிர, தாமே வேள்வி செய்தலுக்கும், திருமணம் போன்றவற்றில் புரோகிதம் செய்வதற்கும் விதி இல்லை; உரிமை இல்லை . புராண, இதிகாசங்களில் ரிஷிகள் வேள்வி செய்ததாக வருகிறது. ரிஷிகள், பத்தினிகளை உடையவர்கள். அவர்களைத் துறவிகள் என்ற நிலையில் கூறுவதில்லை.

    வானப்பிரஸ்தர்கள் வேள்வி செய்தலுண்டு, மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்துப் பிற்பாடு தலைவனும் தலைவியுமாக மேற்கொள்ளும் அத்துறவுக்கு, வேள்வி முதலியன விதிக்கப்பட்ட கடமைகளேயாகும். இவர்கள் தத்தம் கடைத்தேற்றத்திற்காக வேள்விகள் செய்துகொள்வர். ‘தவம்’ செய்வார் தங்கருமஞ் செய்வார்’
நிறைவாக

    சைவ நிறுவனங்களின் தலைவர்களில் முதன் முறையாகத் திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்டு ‘கயிலைக் குருமணி’யாக அருள் ஒளியால் பொலிந்தவர்கள். நம்மைச் ‘சன்யாச ராஜயோகத்’திற்கு ஆட்படுத்தி ஆட்கொண்ட தருமையாதீனம் 25ஆம் பட்டம் ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சன்னிதனாம் அவர்கள் ஆவர். அவர்களின் கயிலை யாத்திரை விசேடங்கள் அறிந்த நாள்முதல் நமக்கும் அவ்வேட்கை தோன்றி, நாளுக்குநாள் பெருகிப் பேருரு எடுத்தது. ஆயின் கயிலாய யாத்திரை செல்ல அரசு ரிதியான தடை ஏற்பட்டுப் பல்லாண்டுகள் நீடித்தது. பின்னர் அத்தடை விலகியதும், சைவத் திருமடங்களின் தலைவர்களின் முதன் முதலாக 1982-ல் கயிலாய யாத்திரை மேற்கொள்ள நமக்குத் திருவருள் கூட்டியது. அப்போதிருந்த காஞ்சித் தொண்டை மண்டல ஆதீனகர்த்தரும், பேரூர் அடிகளாரும், ஈரோடு அன்பர்கள் சிலரும் நம்மிடம் கயிலாய யாத்திலை விருப்பத்தைத் தெரிவித்ததின்பேரில், புதுதில்லியில் உயர் பதவியில் இருந்து திரு. இராமையா அவர்களின் உதவியால், அவர்களுக்கும் அனுமதி கிடைக்கச் செய்ய நம்மால் இயன்றது.

    கயிலாயத்தை நெருங்குகையில் மானசரோவர் ஏரிக் கரையில் மூன்று நாட்கள் ஒரு முகாமில் தங்கியிருந்தோம். அதுபோது பேரூர் அடிகள் ‘அவரவர்களின் விருப்பத்தைச் சொல்லுங்கள்’ என்றார். நாம் ‘திருமுறைகளைத் தலையில் சுமந்தபடி அனைத்துத் தலங்களுக்கும் யாத்திரை செய்து சிவ வழிபாடு செய்துகொள்ள வேண்டுமென்பதே நம் விருப்பம்’ என்றோம். இதை ஈரோடு அன்பர் திரு. முனுசாமி அவர்கள் தாமெழுதிய கயிலாய யாத்திரை என்ற நூலில் பதிவு செய்துள்ளார். அன்றும் சரி , இன்றும் சரி , என்றும், என்றென்றும் திருமுறைகளைச் சிரமேற்கொண்டு போற்றுவதில் நாம் இம்மியளவும் பின்னோக்கியதில்லை. ஓதிய மாத்திரையிலேயே பயன்தரும் திருமுறைகளைச் சடங்குகட்கு உட்படுத்துவது அதன் மதிப்பைக்

குறைப்பதாக நாம் உணர்கிறோம். ஆன்றோர் வாக்கும் அனுமதியும் இல்லாத இச்செயலைச் சமயப் புறகாக, நாம் உணர்த்தப்பட்டுள்ளோம்.


    எம்.எம். தண்டபாணி தேசிகருடன் முறையாகப் பண்ணுடன் திருமுறைகளைப் பயின்ற, நம் முன்னவர்களாகிய ஸ்ரீ காசிவாசி அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் தலங்கள்தோறும் சென்று திருமுறைகளை ஓதி ஓதி மகிழ்ந்தவர்கள் ஆவர். அவர்கள் திருமுறைகளைப் பண்ணொன்றப் பாடப் பயிலவும், ஸ்ரீ உருத்திரம் ஓதவும் பணித்தார்கள். இந்திமொழி கற்கவும், ஆங்கிலம் பேச, எழுதப் பயிலவும் பணித்தார்கள். மோழி துவேஷம் வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்கள். அவ் அறிவுரை நம்மில் நன்றாகப் பதிந்தது. ‘புறநெறி ஆற்றாது, அறநெறி போற்றி நெறி நின்று ஒழுகுதிர்’ என்று ஸ்ரீ குமரகுருபரர் சைவத் ‘துறை அறிமாந்தர்க்குச் சூழ்கடன்’ ஆகச் சொன்ன அருள்வாக்கை எழுத்தெழுத்தாகப் பின்பற்றுகிறோம்.

    முன்னவரும், முதல்வரும், ஆசாரியப் பெருமக்களும் சொன்னவற்றை அன்றி, நாமாக எதுவும் சொல்வதில்லை. திருமுறைகளைப் புரோகிதப் பணிக்குக் கொண்டுசெல்ல முற்பட்ட தொடக்கத்திலேயே நாம் உரத்த குரல் கொடுத்திருக்க வேண்டும். கட்டுக்கோப்பான, திருமுறைப் பெருமை காக்கும் மரபுப் பணியை இனியும் நினைவுறுத்தாமல் விடலாகாது.

    ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்’


என்ற குறளமுத உரைப்படி இப்பொழுதாவது உரத்து உரைக்கத் திருவருட் சம்மதம் நேர்ந்தமையை எண்ணி மகிழ்கிறோம். ஓதினாலேயே இருமை நலன்களும் வாரிவழங்கும் வாரிதிகளான திருமுறைகளை இனியும் கிரியைகட்கு உட்படுத்தவிட்டால்,

அநாதி சைவம், கேட்பாரற்ற அனாதையோ என அகிலத்தார் கருத இடம் ஏற்பட்டுவிடும்.

    நாம் ஒரு கூட்டம் வைத்துள்ளோமே என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்,

            ‘ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
            போற்றினும் பொத்துப் படும்”



என்ற திருவள்ளுவ தேவரின் வாக்கை ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். உச்சியில் இருக்க வேண்டிய திருமுறைகளைத் தோளுக்கு வைத்தாலும் குறைதான் என்பதை அவற்றின் பேரில் கொண்டுள்ள பக்தி மேலீட்டால் நாம் உணர்த்த உணர்ந்துள்ளோம்.

    கடமைகளை வகுத்தளித்து வழிசெய்வானும் அவனே: நிறைவேற்றம் செய்வானும் அவனே, நம் சிவனே!


    திருமுறைகளின் மதிப்பைக் காப்பாற்ற அறிவுறுத்தும் பெருமான், அடியாருடன் கூடித் தல யாத்திரை செய்யும் பெரு விருப்பதையும் நல்கி ஈடேற்றுவித்தான். மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் இறை பணி மன்ற அடியார்களுடன் பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் யாவும் திருமுறை சுமந்து ஓதித் தரிசித்தோம்;. திரு. ஊரன் அடிகள் தாமெழுதிய காசிமடம் வரலாற்றில் இதனைக் குறிப்பிட்டார். இதைப் பெருமைக்காக எழுதவில்லை. ‘கயிலைமாமுனிவர் இலங்கையில் உள்ள இரு தலங்களை (திருக்கேதீச்சரம், கோணமாமலை) இன்னும் வழிபடவில்லை’ என அவர் அந்நூலில் குறிப்பிட்டது திருவருள் நமக்குணர்த்திய குறிப்பாகவே கருதுகிறோம். திருக்கேதீச்சரம் தலத்தில் நாம் பூசனை நேரத்தில் வழிபடவில்லை; தனித்த நேரத்தில் வழிபட்டுள்ளோம். விரைவில் அக்குறை தீர்ந்து இரு தலங்களிலும் வழிபாடாற்றிவர இறையருள் கூட்டும்.



    இன்று வரை நல்லெண்ணங்களையே தந்து வென்றேறச் செய்துவரும் பெருமான் திருமுறைகளின் பெருமை காத்தலாகிய மரபுகாக்கும் வேட்கையையும் நிறைவேற்றுவார் என்பது நிச்சயம்.


    திருத்தருமையாதீனம் 26-ஆவது பட்டம் ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்கள், முறையாக ஏழாண்டுகள் திருமுறைகளை பண்ணிசைகூட்டிப் பாடப் பயின்றவர்கள். திருமுறைகளைப் பாடும் பயிற்சி ஐந்தாண்டுகளாவது பெற வேண்டும். ஏழாண்டுகள் பயின்ற ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்கள், ‘மனமே! திருமுறைகள் ஓதாய்’ (ஓதுவாயாக!) என்ற ஸ்ரீ குருஞான சம்பந்திரின் அருள்வாக்கின் ஆதாரத்துடன் ‘திருமுறைகள் கிரியைகட்கன்று’ என அறிவிக்கிறார்கள். ஆதாரம், அனுமதி இல்லாமல் - சொல்லாமல் ஒரு துரும்பை அசைக்கக்கூட நம் சமயத்தில் நமக்கு அதிகாரமில்லை.


    ஆண்டொன்றுக்கு முன்னூறு சிவாசாரியார்கள் ஆகமப் பயிற்சி முடித்து ஆகம பாடசாலைகளில் சான்றிதழ்கள் பெறுகின்றார்கள். எனவே, ‘சிவாசாரியார்கள் கிடைக்காததால், திருமுறைகளில் வேள்விகளும், வழிபாடுகளும் குட முழுக்குகளும் செய்யுங்கள்’ என்பது பொருந்தாது. தேவாரப் பாடசாலைகள் போதுமான அளவுக்கு இல்லை என்பதும், இருக்கும் பாடசாலைகளில் இப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்வதில்லை என்பதும் உண்மை.

    திருமுறைப் பற்றாளர்கள் எனத் தம்மை விளம்பரப் - படுத்திக்கொள்வோர், இதைப் பற்றிக் கவலைகொள்ளாமல், திருமுறைகளை வைத்துப் புரோகிதம் செய்யப் பயிற்சி தருகிறோம் என்று அறிவிப்பதும், பல்கலைக் கழகங்களையும் அவ்வழிக்கு ஆற்றுப்படுத்துவதும் விநோதமாகும். அரசினுடைய - பல்கலைக் கழகங்களினுடைய இசைக் கல்லூரிகளில் பண்ணிசைத் துறைகளை அமைத்து ஊக்குவித்து, மிகப் பலரையும் அதில் சேருமாறு ஆற்றுப்படுத்துவதே இன்றைய அவசியத் தேவையாகும்.

    நெறிநின்று ஒழுகுவதால், வேத ஆகம பாடசாலைகள் வளர்கின்றன. அவற்றில் பயில்வோரின் எண்ணிக்கை பன்மடங்கு ஆகியது. ஆகம பாடசாலைகள் அனைத்திலும் திருமுறை ஓதவும்  பயிற்றுவிக்கப்படுவது மகிழ்வைத் தருகிறது. சங்கு ‘சுட்டாலும் வெண்மை தரும்.’ திருமுறைகளை மனம்போன போக்கிலெல்லாம் பயன்படுத்தும், நெறியல்லா நெறியையே நெறியாகக் கொண்டொழுகத் தொடங்கியபின் தேவாரப் பாடசாலைகள் அடைக்கப்படுகின்றன. பயில்வோர் பயிற்றுவிப்போர் தேடினும் கிடைக்கவில்லை.

    ‘பாடினால் பணம் குறைவு, தருப்பையை எடுத்தால்தான் தாரளமாக வரும்’ என்று கணக்குப் போடுபவர்கள், திருமுறைப் பற்றாளர்களும் அல்லர்;  இறைபக்தியாளர்களும் அல்லர்; அவர்கள் ஒருவகை வணிகர்களே ஆவர்.


    குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், பரி பூரணம் அடைந்த தவத்திரு. குன்றக்குடி அடிகளார், ‘திருக்கோயில்களில் திருமுறைகள் ஒலிக்கவேண்டும்’ என்ற முழக்கத்தை அரசின் செவிகளுக்கு ஏற்றுவதற்கு அனைத்து ஆதீனங்களும், மடங்களும் ஒருமித்து எடுத்துரைக்க வேண்டுமெனக் கேட்டதின்பேரில் ஒரே குரலாக அது தெரிவிக்கப்பெற்று வெற்றிபெற்றது. ஆயினும், ஓதுவார்கள் கிடைக்கவில்லை என்பதை தற்போதையே குறையாக உள்ளது.


    துறவியருள் ஒருமித்த கருத்து வேண்டும் என அவர்கள் உருவாக்கிய நெறி, தற்போது தடம் மாறுகிறது. சிதம்பரத்தில் நடைபெற்ற உலகச் சைவ மாநாட்டில் நாம் கலந்துகொள்ள இயலாத வகைக்குத் தொடக்கத்தில் நடைமுறைகள் அமைந்தன.
பெருமான் அச்சூழலை மாற்றினார். மாநாட்டிலும் முதல் தீர்மானமாக, வேத, ஆகம, புராண, இதிகாச, திருமுறை நெறிகளைப் பின்பற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. சைவ ஆதீனங்கள், மடங்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுவரின், அது மாறுபாடாக மாறாமல் இருக்க ஒன்று கூடிப் பேசுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவ்விரு முடிபுகளுமே மதிக்கப்படாமல், ஆங்காங்கே பிறழுதல் நிகழ்கிறர் என்பதால், நாம் முடிவெடுத்த கருத்துகளை மீண்டும் விவரித்து எழுத வேண்டியதாகிறது.


    சைவத் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்திப் பல்லாண்டுகட்கு முன்பே முதன் முறையாக அறிக்கை வெளியிட்ட நாம், இன்றும் ‘அவ்வொற்றுமை  ஓன்று மட்டுமே நம்மைப் பெருமைப்படுத்தும், சிறப்புகளை மிகுவிக்கும்’ என்பதில் உறுதியாக உள்ளோம்.

    எதெதற்கு எதெது உரியதோ, அததற்கு அததைப் பயன்படுத்தும் மரபுப்படி - ஆட்சி ஆவணங்களின்படி, உச்சிமீது கொண்டாடவேண்டிய திருமுறைகளைக் கிரியைகட்கு ஆட்படுத்தலாகாது; அச்செயல் திருமுறைகளைத் தரம் குறைக்கும் செயலாகும் அப்பெருமந்திரங்களை ஓதியே நலம்பெற்று உலகம் உய்வதாகுக! என்பது மட்டுமே நம் பெருவிருப்பமாகும்.

    ‘திருமுறைகளை ஓதி வேள்வி செய்யக்கூடாதென்று, திருமுறைகளில் எங்கேனும் உண்டா?’ என்று அறிஞர்கள் கேட்கிறார்கள். மிகப்பல பதிகங்களில் ‘ஓதவேண்டும், பத்தும் ஓத வேண்டும்’ என வருவது கொண்டு, அது விதி
என உணர்தல் வேண்டும். விதியை அவர்களே அருளிய பிறகு வேறெவ் வகையிலும் அதனைப் பயன்படுத்தலாகாது எனப் புரிந்துகொள்வது அழகு. அப்படிப் புரிந்துகொள்ளவில்லையென்றால், திருமுறை ஓதி வேள்வி செய்யலாம் என்று எங்கு உள்ளது? ஆட்சி உண்டா? ஆசாரியன் யார்? ஏன்று வினாக் கணைகள் தொடர்ந்துவருமே! இல்லை, இல்லை, இல்லை என்ற ஒரே பதிலைத்தானே ஓயாமல் சொல்லவேண்டிவரும்! எண்ணிப்பார்க்க வேண்டாமா?


    நமக்கு யாரிடமும் வெறுப்போ பகையோ என்றும் இருந்ததில்லை; இனி இருக்கப்போவதுமில்லை. ‘அழிவந்த செய்யினும் அன்பு அறார்’ என்ற நிலையிலேயே இருந்து.

        ‘அழிவினை நீக்கி ஆறுஉய்த்து, அழிவின்கண்
          அல்லல் உழப்பதாம் நட்பு’


என்ற திருக்குறளைத் தலையாய கட்டளையாகவே ஏற்றுப் பின்பற்றுவோம்.


        ‘அனுசயப் பட்டு அதுஇது என்னாதே
         கனிமனத்தொடு கண்களும் நீர்மல்கிப்
         புனிதனைப் பூவனூரனைப் போற்றுவார்
         மனிதரில் தலையான மனிதரே’

                            (அப்பர் - திருக்குறுந்தொகை)



    (அனுசயப்பட்டு - ஒருவரோடு ஒருவர் பகைமையுற்று; அது இது  என்னாதே - அது  நன்று இது தீது, இது நன்று அது தீது என்று மாறுபடாமல் ; கனிமனத்தொடு - கனிந்த மனத்தொடு; தலையான மனிதர் சிறந்த மனிதர்.)

        ‘வேதத்தை விட்ட. அறம் இல்லை; வேதத்தின்
         ஓதத்தகும் அறம் எல்லாம் உள் தர்க்க
         வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
         வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே’


                        (திருமந்திரம் - வேதச் சிறப்பு -1)

    (வேதத்தில் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணரவேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து, எல்லாச் சொல் வளமும், பொருள் வளமும் உடைய வேதத்தை ஓதியே வீட்டையும் நெறியைப் பெற்றார்கள் - சி. அருணைவடிவேல் முதலியார்.)

        ‘புறநெறி ஆற்றாது அறநெறி போற்றி
         நெறிநின்று ஓமுகுதிர் மன்ற
         துறையறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே’

                        (குமரகுருபரர் - சி.செ. கோவை)

    (புறநெறி ஆற்றாது - அறத்தாறல்லாத நெறியில் நின்று செயல் புரியமால்; துறை  அறிமாந்தர் - தாம் ஒழுகும் வழி இஃதென அறிந்த அறிஞர்.)

    “மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் !”

                            - சிவ சிவ.


Tuesday, December 14, 2010

வைதிக சைவநெறியை தோற்றுவித்தவர் யார்?

திருச்சிற்றம்பலம்

நம் செந்தமிழ் நாட்டிலே சைவ சமயக் குரவர் போற்றிப்  பாதுகாத்த  வைதிக சைவநெறியை  எப்படியாவது அழித்து விட வேண்டுமென  இன்று திருவேடம் பூண்ட  சிலர் முனைப்போடு செயல்பட்டு வருவதை நம்மால் காண முடிகிறது.நம் சிவ பெருமான் அருளிய வேதத்திற்கு உட்பட்ட வைதிகநெறிச்  சடங்குகளுக்கு  போட்டியாக  புதிதாக நவீன செய்முறைகளை உருவாக்கி அதனை பரப்பி தமிழகத்தில் மறை வழக்கத்தையே இல்லாமல் செய்து  விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சியும் செய்து வருகின்றனர்.இவர்களின் முயற்சி படுதோல்வி அடைவதுடன் தீராப் பாவத்தையும் தரும் என்பதை உணரும் நிலையில் இவர்கள் இல்லாதது மிகவும் வருந்ததக்கது.

வைதிக சைவத்தை போற்றிப் பாதுகாத்த திருமுறையின் பெயரைக் கொண்டே வைதிக நெறியை இவர்கள் அழிக்க முற்படுவது எவ்வளவு கொடுமை!  சிவதா! சிவதா!

இறைவன் வாக்கினையும் நம் அருளாளர்கள் வாக்கினையும் துச்சமென மதித்து வைதிக சைவத்திற்கு துரோகம் இழைக்கும் இவர்களை
நம் திருமுறை ஆசிரியர்கள்  மன்னிப்பார்களா ?
முன்னை மறை ஆயிரம் மொழிந்த அந்த இறைவன் தான் மன்னிப்பானா?
இவர்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க இயலாத சிவ அபச்சாரம் என  என்று உணர்வார்களோ ?
பிழைப்பன் ஆகிலும் திருவடி பிழையேன் என்ற திருமுறை வாக்கினை இவர்கள் ஏன் மறந்தனரோ?


தங்கள் நவீன செய்முறைகளாலும் தமிழ் பற்று என்ற போர்வையில் இவர்கள் செய்யும்  தவறான பிரச்சாரத்திற்கு மயங்கி  அப்பாவி சைவர்களில்   சிலர் வீழ்வதே நமக்கு வேதனையைத் தருகிறது.

வைதிகநெறியை அழித்தே ஆக வேண்டும்  என்ற இவர்களின் முயற்சி வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சம் சைவ சமயிகள்  சிலரிடம் தற்போது எழுந்துள்ளது.வரலாற்றினை திருப்பிப் பார்த்தால் எத்தனையோ நெறியல்லா நெறிகள் தோன்றி அழிந்துள்ளதை நாம் காண்கிறோம் .அவை அனைத்தும் மனிதனால்  தோற்றுவிக்கப்பட்டவை. எப்போது ஒரு நெறிக்கு (ஆதி) தோற்றம் இருக்கிறதோ அதற்கு முடிவும்(அந்தம்) கண்டிப்பாக உண்டு..

ஆனால் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய சிவப்பரம்பொருளினால் தோற்றுவிக்கப்பட்ட நம்   வைதிக சைவநெறியை இன்று சில மனிதர்கள் உருவாக்கிய நெறியல்லா நெறி அழித்து விடுமோ?

திருவேடம் பூண்டு திருமுறையே எங்களுக்கு எல்லாம் என்று கூறிவிட்டு இன்று சிலர்  நம்மைப் பார்த்து "உங்கள் வைதிக சைவம்" என்று தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சமயம் போல் பிரித்துக் கூறுகின்றனர்.
திருமுறைகள் போற்றும் வைதிக சைவத்தை உங்கள் வைதிக சைவம் என்றவர்கள், திருமுறைகள் போற்றிய நம் இறைவனை உங்கள் சிவபெருமான் என என்று  கூறப்போகிறார்களோ?
உங்கள் வைதிக சைவம் என்று நம்மை வைதிக சைவத்தினராகக்   கூறியது  மிகவும் மகிழ்ச்சியே!
ஆனால் இவர்கள் எந்த சமயம் எனபதை நமக்கு அறிவிக்கவும் மறந்து விட்டனர்.

திருமுறையை போற்றிக்கொண்டு "உங்கள் வைதிக சைவம்" என்கிறார்களே  என்ற  குழப்பம் பலருக்கு ஏற்படலாம்,நாம் அனைவரும் போற்றும் பன்னிரு  திருமுறை வைதிக சைவத்தை பற்றி என்ன கூறுகின்றது என்று பார்த்தால் நமக்கு கீழ்காணும் விடையே கிடைகின்றது
.

கேள்வி : வைதிகநெறியை தோற்றுவித்தவர் யார் ? 
பதில் : சிவபெருமான்

இந்த பதில் அடியேனுடையது அல்ல. குன்றத்தூர் வள்ளலார் எம்பிரான் தெய்வச் சேக்கிழார் பெருமான் தான் பெரிய புராணத்தில் கூறுகிறார். இதோ அந்தப் பாடல்!

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்


மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ      
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வை
தீகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென வையமுற வெய்தி.     32

பொருள்
இவ்வாறு கண்ட திருவேடமானது செறிந்து வளர்கின்ற பேரழகே முதிர்ந்து மூப்பாகிய வடிவமோ; அன்றி அவ்வாறு உள்ள மூப்பினது உண்மை உருவமோ;  அன்றி உண்மை  வைதீ நெறியை உலகில் விளைவித்த மூலப்பொருளோ  என்று அங்குக் கண்டார் யாவரும் ஐயம் கொள்ளும்படியாக வந்து;

 அழகு முத்த வடிவு - மூப்பினால் அழகை இழப்பது உலக இயல்பு. இவ்வடிவம் அவ்வாறன்றி அழகே முதிர்ந்து மூத்தது என்று சொல்லும்படி தோன்றிய வடிவம். இனி, அழகு எப்போதும் மூப்படையாது என்றால் இது அழகிய மூப்பின் வடிவமேயோ என்னும்படி என்பார் அத்தகை (அழகிய) மூப்பின் வடிவமோ என்றார்

 விளைத்த முதல் - வைதிக  நெறியை உலகத்திற்கு விளைவித்துக் கொடுத்த மூலம். வேதத்தைக் கொடுத்தாராதலின்
அந்நெறியை விளைத்த முதல் என்றார். முதல் - மூல முதல்வன் என்ற குறிப்புமாம்.
வையமுற - பூமியிலே - என்றலுமாம்.

ஒன்றல்ல இரண்டல்ல இது போல் எண்ணிலடங்கா  திருமுறைப் பாடல்கள் வைதிக சைவத்தைப் போற்றுகின்றன.


பழைய வைதிக சைவம் பரக்கவே என்பது ஸ்ரீஉமாபதியார் திருவாக்கு என்பதையும் இங்கு நினைக!


இவ்வாறு திருமுறைகள் போற்றிய   வைதிக சைவத்தை,
நம் அருளாளர்கள் போற்றிய வைதிக சைவத்தை,
சிவபெருமானே தோற்றுவித்த  வைதிக சைவத்தை,  நவீன நெறிகளை கொண்ட சிலரால்  அழித்து விட முடியுமோ?
நிச்சயம் முடியாது.இதற்கான பதிலை காலம் அனைவருக்கும் சொல்லும்.

மொழிவெறி என்ற மாயை வயப்பட்டு "வேதப் பயனாம் சைவம் " என்ற திருநெறிய தெய்வத் தமிழ் மறையின் ஆணையையும்  மீறி இன்று சிலர் எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர்.தான் செல்வதோடு மட்டுமல்லாமல் அப்பாவி அன்பர்கள்  பலரையும் தன்னோடு இழுத்துச் செல்கின்றனர்.இதனை காணும் போது திருமூலர் அருளிய திருமந்திரப்பாடலே நினைவிற்கு வருகிறது.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே - திருமந்திரம்

நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வுலகில் அனைவரும் பத்திமை செய்கின்றனர்.
நாம் என்ன கடவுளை நேரில் கண்டு  உறுதி செய்த பின்னரா   வழிபடுகிறோம்? இல்லையே!

அதுபோல் இது தான்  வேதம்.இதை அருளியவன் இறைவன் என்று நம் அருள் நூல்களும் அருளாளர்களும்  கூறி இருப்பதை துளியும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் , அருளாளர்கள் வாக்கினை சிரமேற்  கொண்டு ஒழுகுவதே உண்மையான பக்தர்களின் நிலைப்பாடு.

அதை விடுத்து  இது வேதம் இல்லை? இதை இறைவன் சொல்லவில்லை?  இது இறைவன் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்" என்றெல்லாம் வாதம்  செய்வது என்ன நிலையோ? முறையான ஆதாரம் கொடுத்தாலும் அதனை ஏற்காத மனநிலை நம்மை மிகுந்த வியப்பிலும்  ஆழ்த்துகிறது


மேலும் இவ்வாறெல்லாம் வாதம் செய்வது "கடவுள் இருக்கிறாரா? எங்கே காட்டு பார்ப்போம்" என்று கூறும்   நாத்திகவாதத்தைத்    தான் நினைவுபடுத்துகிறது.

வேதத்திற்கு இறைவன் ஒருவனே  பொருள் சொல்ல முடியும். ஏனையோரால் இயலாது என்பதை நம் திருவிளையாடல் புராணத்தில் வரும்  வேதத்திற்கு பொருள் அருளிய  படலம் மிகத்  தெளிவாக கூறுகின்றது  .நிலைமை இவ்வாறிருக்க , "நான் வேதத்தை படித்தேன்.அதில் சிவ வழிபாடு  கூறப்படவில்லை, வேதம் சிவபெருமானை போற்ற வில்லை என்று  கண்டுபிடித்தேன்.வேதத்தில் இங்கே பிழை அங்கே பிழை " என பிதற்றுவது எவ்வளவு அறியாமை?

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்க முதல் கற்ற கேள்வி வல்லார்களுக்கே வேதத்தின் பொருள் விளங்காதிருக்க இறைவனே நேரில் வந்து பொருள் அருளினார்  என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

ஆனால்  நவீனர்களுக்கு மட்டும் எப்படி வேதத்திற்கு பொருள் விளங்கியது என்பதே நமக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது
நான்மறை ஆறங்க முதல் கற்ற கேள்வி வல்லார்களுக்கே வேதத்தின் பொருள் விளங்காத நிலையில், எங்கேயோ லண்டனில் பிறந்த ஒரு வேற்று சமயத்தவர்  மற்றும் சிலர் நம் சமயத்தை பிரித்தாளும் சூழ்ச்சியில் வேதத்தை ஆராய்ந்து அதற்கு  விபரீத  பொருள் கண்டார்கள். அந்த தவறான  பொருளை மெய்யென்று நம்பி  இன்று சைவ வேடம் கொண்ட சிலரே  அதனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது என்ன நிலையோ?

இதை அவர்கள்  அறியாமையில் செய்கிறார்களா 
இல்லை அறிந்தும் வேறு உள்நோக்கத்தோடு   செய்கிறார்களா என்ற ஐயமும் நம்மிடையே எழுகிறது.

பிற சமயத்தவர்களின் வேத ஆராய்ச்சி முடிவை ஏற்றுப்  போற்றும் நவீனர்கள், நம் திருவிளையாடல் புராணம் கூறும்   வேதத்திற்கு பொருள் அருளிய  படலத்தை ஏற்க மறுப்பது ஏனோ?
அன்பர்களே, இதை விட பெரிய சைவத் துரோகம் இருக்க முடியுமா? சிவதா! சிவதா!

வேதத்தை இகழ்ந்து வேதவேள்விகள் புறக்கணிக்கப்பட்டதால் பாண்டிய நாடு மழையின்றி பல  இன்னல்களை அடைந்து  பின் செந்தமிழ்ச்  சொக்கநாதப் பெருமானே பாண்டிய மன்னன் கனவில் வந்து வேதத்தின் பெருமையை அறிவித்து, வேத வேள்விகள் செய்ய உலவாக் கிழி அருளியதாக  உலவாக் கிழி அருளிய படலம் கூறுகின்றது.

இதுபோலவே பெரியபுராணத்திலும்  சிவபாதஇருதயர்  வேதவேள்வி செய்யப் பொருள்  வேண்டவும், 
திருஞானசம்பந்தப் பெருமான் "இடரினும்  தளரினும்" எனும்  பதிகம் பாட  திருஆவடுதுறை அமர்ந்தருளும் அண்ணலும்    உலவா பொற்க்கிழியை  அருளியதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.மேற்கண்ட  திருவிளையாடல்  புராணம் &  மற்றும் பெரிய புராண நிகழ்வுகளை ஒப்பு நோக்கி பார்க்கும் பொழுது வேதவேள்விகள் இவ்வுலக இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதன என்றும் மேலும் வேதம் தானே நமது ஆணை என்று இறைவனே அருளியுள்ளதால் வேதவேள்விகளின்   பெருமைகளும்  நமக்குத்  தெரிய வருகின்றது.இவ்வாறு சைவ சமயம் ஏற்றுப் போற்றும் வேதத்தின் உண்மைகளை ஏற்க மறுத்து நிந்தனை செய்வதை நோக்கும் போது

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும

என்ற பொய்யா மொழிப் புலவரின் குறள் நினைவுக்கு வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை
 
உலவாக் கிழி அருளிய படலம் - திருவிளையாடல் புராணம்


ஏடார் அலங்கல் வரை மார்ப வெம்பால் என்றும அன்பு உடைமை
வாடா விரத விழுச் செல்வம் உடையாய் வைய மறம் கடிந்து
கோடாது அளிக்கும் செம் கோன்மை உடையாய் உனக்கு ஓர் குறை உளது உன்
வீடா வளம் சேர் நாட்டி இந் நாள் வேள்விச் செல்வம் அருகியதால்

மறையே நமது பீடிகையாம் மறையே நமது பாதுகையாம்
மறையே நமது வாகனம் மா மறையே நமது நூபுரம் ஆம்
மறையே நமது கோவணம் ஆம் மறையே நமது விழியாகும்
மறையே நமது மொழியாகும் மறையே நமது வடிவாகும்.   

வேதம் தானே நமது ஆணைச் சத்தி வடிவாய் விதிவிலக்காய்
போதம் கொளுத்தி நிலை நிறுத்திப் போகம்கொடுத்துப் பல் உயிர்க்கும்
பேதம் செய்யும் பிணி அவிழ்த்து எம் பிரியா வீடு தருவது ஏன்
நாதம் செய்யும் தார் வேந்தே நமது செங்கோல் அது ஆகும்.   

அந்த மறைகள் தமக்கு உறுதி ஆவார் அந்நூல் வழி கலி நோய்
சிந்த மகத் தீ வளர்த்து எம்பால் சிந்தை செலுத்தும் அந்தணரால்
இந்த மறையோர் வேள்வி மழைக்கு ஏது வாகும் இவர் தம்மை
மைந்த இகழ்ந்து கை விட்டாய் அதனான் மாரி மறுத்தன்று ஆல்

மும்மைப் புவனங்களும் உய்ய முத்தீ வேட்கும் இவர் தம்மை
நம்மைப் போலக் கண்டு ஒழுகி நாளும் நானா வறம் பெருக்கிச்
செம்மைத்தருமக் கோல் ஓச்சித் திகிரி உருட்டி வாழ்தி என
உம்மைப் பயன் போல் எளி வந்தார் உலவாக் கிழி ஒன்று உதவுவார்

மேற்கண்ட திருவிளையாடல் புராண  பாடல்களுக்கு நம் நவீனர்கள் என்ன பொருள் கூற முடியும்?
இத்துணை பெருமையுடைய வேதங்கள் கடலில் அழிந்தன! மொழி பெயர்க்கப்பட்டன! என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்வதேனோ?


மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனம் வேண்டும் என்று நம் நந்தியம் பெருமான் கயிலை நாதனிடம் வேண்டிய விண்ணப்பத்தை  சைவர்கள் தங்கள் சிரமேற் கொண்டு ஒழுக வேண்டும்.

"வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்" 
என்று நம் திருமுறை ஆணையிடுவதால் (சுந்தரர் தேவாரம்- ஆரூர்),
இது போல் மறைகள் மற்றும் சைவ நிந்தை செய்வோர்களுக்கு துணை போதலே பெரும் பாவம் என சைவர்கள் தெளிய வேண்டும்.

உலவாக் கிழி அருளிய படலம் கூறிய அதே நிலை தான் , தற்சமயம் நம் தமிழ்நாட்டில் நிலவுகிறது.அன்று இறைவனே வெளிப்பட்டு பாண்டிய நாட்டினை காத்தருளினார்.அது போல்  இப்போதும் எப்போதும் காலகாலனாகிய கண்ணுதல் கடவுள் நம்மைக் காத்தருள்வார்.
எல்லாம் வல்ல அன்னை அங்கயற்கண்ணி உடனாகிய செந்தமிழ்ச்  சொக்கநாதப் பெருமான் திருவருள் நம்மை காத்து அருள்வதாக!

விடையேறும் வித்தகர் தோற்றுவித்த வைதிக சைவ வாய்மை நிலை பெற்று விளங்கும்.

பழைய வைதிக சைவம் பரக்கவே!

திருச்சிற்றம்பலம்


Sunday, November 21, 2010

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு

குமரகுருபரர் இதழ் - தலையங்கம்



சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன.
இறை திருமேனிகளின் சான்னித்தியத்தை மந்திரங்களாலும், நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும், மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இது, வரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோ, மரபு மீறலே ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கி, அவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது.
வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டா” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார்.
தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை “மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது.
“வேதத்தில் உள்ளது நீறு”,  “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா........ ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள், பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி யுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர். 

“அனுச யப்பட் டதுஇது வென்னாதே 
  கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் 
  புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார் 
  மனித ரில்தலை யான மனிதரே.”
     - திருநாவுக்கரசர். 
கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் “அதங்கோட்டாசான்” என்பவரை, பாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.
இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, வேத வேள்விகள் பல செய்வித்தமையால் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.
தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் “அந்தணர் நூல்”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை - வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் “அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் “தமிழ் மறை” என்கிறோம். “மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் “தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம்.
சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன.
காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்; அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறயோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது.
இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் நிலத்தில் - தமிழரின் வாழ்வில் வேதங்கள் - வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோ, தமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை.
தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களி - ஆகமங்களை - வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்தது, சிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர், வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்?
தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்வி, தமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லை, செய்யமுற்படவும் இல்லை. எனவே அவை “மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை, அவர்களுக்கு எழவில்லை.
நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும், அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்; அவர்க்கும் தமர்க்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்; எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும், எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் “வெந்தழலில் வேகாது, வெள்ளத்தால், போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும், திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை - திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்கு, மறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு.
ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்டவரை, யாரும் “தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. “தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்; திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால், சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.
திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டு, வசதிக்காக - புகழுக்காக - பொருளுக்காக - கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமா? செயற்படலாமா?
எதற்கு எது உரியதோ, அதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால், ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களே அப்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு இல்லாத தமிழ் பற்று நம்மில் யாருக்கு இல்லை.
வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் “வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும்.
மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும், பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.
பெருமழையைத் தருவித்ததும், நிருத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள், ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். “பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் - திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை.
வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேத வழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களை, கடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய “மரபு மீறும் செயல்கட்கு மறைகளோ, திருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வது, திருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாத, தமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்ட, எளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதன்மூலம் புகழ், பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று - திருமுறைப் பற்று என்று கொள்ளப்பட்டாது.
சிந்தித்து தெளிந்தார்க்கு பாராயணம் செய்யவேண்டிய திருமுறைகளைத் தொடர்ந்து தந்துள்ளோம். நாள்தோறும் அதனைப் பாராயாணம் செய்யுங்கள். ஒல்லும் வகையில் பிறரையும் அந்நெறியில் ஆற்றுப்படுத்துங்கள். வேண்டுவோர்க்கு இம்மையே நன்மைதரும் திருமுறைத் திருப்பதிகங்கள் அனுப்பப்பெறும்.
பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

1156 வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.1
1157. வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வமுடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.2
1158. மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.3
1159. அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.4
1160. அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.5
1161. வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.6
1162. அழல தோம்பும் அருமறை யோர்திறம்
விழல தென்னும் அருகர் திறத்திறங்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல்இ லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.7
1163. நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.8
1164. நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.9
1165. அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.10
1166. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
3.108.11