திருச்சிற்றம்பலம்
நம் செந்தமிழ் நாட்டிலே சைவ சமயக் குரவர் போற்றிப் பாதுகாத்த வைதிக சைவநெறியை எப்படியாவது அழித்து விட வேண்டுமென இன்று திருவேடம் பூண்ட சிலர் முனைப்போடு செயல்பட்டு வருவதை நம்மால் காண முடிகிறது.நம் சிவ பெருமான் அருளிய வேதத்திற்கு உட்பட்ட வைதிகநெறிச் சடங்குகளுக்கு போட்டியாக புதிதாக நவீன செய்முறைகளை உருவாக்கி அதனை பரப்பி தமிழகத்தில் மறை வழக்கத்தையே இல்லாமல் செய்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சியும் செய்து வருகின்றனர்.இவர்களின் முயற்சி படுதோல்வி அடைவதுடன் தீராப் பாவத்தையும் தரும் என்பதை உணரும் நிலையில் இவர்கள் இல்லாதது மிகவும் வருந்ததக்கது.
வைதிக சைவத்தை போற்றிப் பாதுகாத்த திருமுறையின் பெயரைக் கொண்டே வைதிக நெறியை இவர்கள் அழிக்க முற்படுவது எவ்வளவு கொடுமை! சிவதா! சிவதா!
இறைவன் வாக்கினையும் நம் அருளாளர்கள் வாக்கினையும் துச்சமென மதித்து வைதிக சைவத்திற்கு துரோகம் இழைக்கும் இவர்களை
நம் திருமுறை ஆசிரியர்கள் மன்னிப்பார்களா ?
முன்னை மறை ஆயிரம் மொழிந்த அந்த இறைவன் தான் மன்னிப்பானா?
இவர்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க இயலாத சிவ அபச்சாரம் என என்று உணர்வார்களோ ?
பிழைப்பன் ஆகிலும் திருவடி பிழையேன் என்ற திருமுறை வாக்கினை இவர்கள் ஏன் மறந்தனரோ?
தங்கள் நவீன செய்முறைகளாலும் தமிழ் பற்று என்ற போர்வையில் இவர்கள் செய்யும் தவறான பிரச்சாரத்திற்கு மயங்கி அப்பாவி சைவர்களில் சிலர் வீழ்வதே நமக்கு வேதனையைத் தருகிறது.
வைதிகநெறியை அழித்தே ஆக வேண்டும் என்ற இவர்களின் முயற்சி வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சம் சைவ சமயிகள் சிலரிடம் தற்போது எழுந்துள்ளது.வரலாற்றினை திருப்பிப் பார்த்தால் எத்தனையோ நெறியல்லா நெறிகள் தோன்றி அழிந்துள்ளதை நாம் காண்கிறோம் .அவை அனைத்தும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. எப்போது ஒரு நெறிக்கு (ஆதி) தோற்றம் இருக்கிறதோ அதற்கு முடிவும்(அந்தம்) கண்டிப்பாக உண்டு..
ஆனால் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய சிவப்பரம்பொருளினால் தோற்றுவிக்கப்பட்ட நம் வைதிக சைவநெறியை இன்று சில மனிதர்கள் உருவாக்கிய நெறியல்லா நெறி அழித்து விடுமோ?
திருவேடம் பூண்டு திருமுறையே எங்களுக்கு எல்லாம் என்று கூறிவிட்டு இன்று சிலர் நம்மைப் பார்த்து "உங்கள் வைதிக சைவம்" என்று தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சமயம் போல் பிரித்துக் கூறுகின்றனர்.
திருமுறைகள் போற்றும் வைதிக சைவத்தை உங்கள் வைதிக சைவம் என்றவர்கள், திருமுறைகள் போற்றிய நம் இறைவனை உங்கள் சிவபெருமான் என என்று கூறப்போகிறார்களோ?
உங்கள் வைதிக சைவம் என்று நம்மை வைதிக சைவத்தினராகக் கூறியது மிகவும் மகிழ்ச்சியே!
ஆனால் இவர்கள் எந்த சமயம் எனபதை நமக்கு அறிவிக்கவும் மறந்து விட்டனர்.
திருமுறையை போற்றிக்கொண்டு "உங்கள் வைதிக சைவம்" என்கிறார்களே என்ற குழப்பம் பலருக்கு ஏற்படலாம்,நாம் அனைவரும் போற்றும் பன்னிரு திருமுறை வைதிக சைவத்தை பற்றி என்ன கூறுகின்றது என்று பார்த்தால் நமக்கு கீழ்காணும் விடையே கிடைகின்றது.
கேள்வி : வைதிகநெறியை தோற்றுவித்தவர் யார் ?
பதில் : சிவபெருமான்
இந்த பதில் அடியேனுடையது அல்ல. குன்றத்தூர் வள்ளலார் எம்பிரான் தெய்வச் சேக்கிழார் பெருமான் தான் பெரிய புராணத்தில் கூறுகிறார். இதோ அந்தப் பாடல்!
பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்
மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதீகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென வையமுற வெய்தி. 32
பொருள்
இவ்வாறு கண்ட திருவேடமானது செறிந்து வளர்கின்ற பேரழகே முதிர்ந்து மூப்பாகிய வடிவமோ; அன்றி அவ்வாறு உள்ள மூப்பினது உண்மை உருவமோ; அன்றி உண்மை வைதீக நெறியை உலகில் விளைவித்த மூலப்பொருளோ என்று அங்குக் கண்டார் யாவரும் ஐயம் கொள்ளும்படியாக வந்து;
அழகு முத்த வடிவு - மூப்பினால் அழகை இழப்பது உலக இயல்பு. இவ்வடிவம் அவ்வாறன்றி அழகே முதிர்ந்து மூத்தது என்று சொல்லும்படி தோன்றிய வடிவம். இனி, அழகு எப்போதும் மூப்படையாது என்றால் இது அழகிய மூப்பின் வடிவமேயோ என்னும்படி என்பார் அத்தகை (அழகிய) மூப்பின் வடிவமோ என்றார்
விளைத்த முதல் - வைதிக நெறியை உலகத்திற்கு விளைவித்துக் கொடுத்த மூலம். வேதத்தைக் கொடுத்தாராதலின் அந்நெறியை விளைத்த முதல் என்றார். முதல் - மூல முதல்வன் என்ற குறிப்புமாம்.
வையமுற - பூமியிலே - என்றலுமாம்.
ஒன்றல்ல இரண்டல்ல இது போல் எண்ணிலடங்கா திருமுறைப் பாடல்கள் வைதிக சைவத்தைப் போற்றுகின்றன.
பழைய வைதிக சைவம் பரக்கவே என்பது ஸ்ரீஉமாபதியார் திருவாக்கு என்பதையும் இங்கு நினைக!
இவ்வாறு திருமுறைகள் போற்றிய வைதிக சைவத்தை,
நம் அருளாளர்கள் போற்றிய வைதிக சைவத்தை,
சிவபெருமானே தோற்றுவித்த வைதிக சைவத்தை, நவீன நெறிகளை கொண்ட சிலரால் அழித்து விட முடியுமோ?
நிச்சயம் முடியாது.இதற்கான பதிலை காலம் அனைவருக்கும் சொல்லும்.
மொழிவெறி என்ற மாயை வயப்பட்டு "வேதப் பயனாம் சைவம் " என்ற திருநெறிய தெய்வத் தமிழ் மறையின் ஆணையையும் மீறி இன்று சிலர் எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர்.தான் செல்வதோடு மட்டுமல்லாமல் அப்பாவி அன்பர்கள் பலரையும் தன்னோடு இழுத்துச் செல்கின்றனர்.இதனை காணும் போது திருமூலர் அருளிய திருமந்திரப்பாடலே நினைவிற்கு வருகிறது.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே - திருமந்திரம்
நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வுலகில் அனைவரும் பத்திமை செய்கின்றனர்.
நாம் என்ன கடவுளை நேரில் கண்டு உறுதி செய்த பின்னரா வழிபடுகிறோம்? இல்லையே!
அதுபோல் இது தான் வேதம்.இதை அருளியவன் இறைவன் என்று நம் அருள் நூல்களும் அருளாளர்களும் கூறி இருப்பதை துளியும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் , அருளாளர்கள் வாக்கினை சிரமேற் கொண்டு ஒழுகுவதே உண்மையான பக்தர்களின் நிலைப்பாடு.
அதை விடுத்து இது வேதம் இல்லை? இதை இறைவன் சொல்லவில்லை? இது இறைவன் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்" என்றெல்லாம் வாதம் செய்வது என்ன நிலையோ? முறையான ஆதாரம் கொடுத்தாலும் அதனை ஏற்காத மனநிலை நம்மை மிகுந்த வியப்பிலும் ஆழ்த்துகிறது
மேலும் இவ்வாறெல்லாம் வாதம் செய்வது "கடவுள் இருக்கிறாரா? எங்கே காட்டு பார்ப்போம்" என்று கூறும் நாத்திகவாதத்தைத் தான் நினைவுபடுத்துகிறது.
வேதத்திற்கு இறைவன் ஒருவனே பொருள் சொல்ல முடியும். ஏனையோரால் இயலாது என்பதை நம் திருவிளையாடல் புராணத்தில் வரும் வேதத்திற்கு பொருள் அருளிய படலம் மிகத் தெளிவாக கூறுகின்றது .நிலைமை இவ்வாறிருக்க , "நான் வேதத்தை படித்தேன்.அதில் சிவ வழிபாடு கூறப்படவில்லை, வேதம் சிவபெருமானை போற்ற வில்லை என்று கண்டுபிடித்தேன்.வேதத்தில் இங்கே பிழை அங்கே பிழை " என பிதற்றுவது எவ்வளவு அறியாமை?
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்க முதல் கற்ற கேள்வி வல்லார்களுக்கே வேதத்தின் பொருள் விளங்காதிருக்க இறைவனே நேரில் வந்து பொருள் அருளினார் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
ஆனால் நவீனர்களுக்கு மட்டும் எப்படி வேதத்திற்கு பொருள் விளங்கியது என்பதே நமக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது
நான்மறை ஆறங்க முதல் கற்ற கேள்வி வல்லார்களுக்கே வேதத்தின் பொருள் விளங்காத நிலையில், எங்கேயோ லண்டனில் பிறந்த ஒரு வேற்று சமயத்தவர் மற்றும் சிலர் நம் சமயத்தை பிரித்தாளும் சூழ்ச்சியில் வேதத்தை ஆராய்ந்து அதற்கு விபரீத பொருள் கண்டார்கள். அந்த தவறான பொருளை மெய்யென்று நம்பி இன்று சைவ வேடம் கொண்ட சிலரே அதனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது என்ன நிலையோ?
இதை அவர்கள் அறியாமையில் செய்கிறார்களா இல்லை அறிந்தும் வேறு உள்நோக்கத்தோடு செய்கிறார்களா என்ற ஐயமும் நம்மிடையே எழுகிறது.
பிற சமயத்தவர்களின் வேத ஆராய்ச்சி முடிவை ஏற்றுப் போற்றும் நவீனர்கள், நம் திருவிளையாடல் புராணம் கூறும் வேதத்திற்கு பொருள் அருளிய படலத்தை ஏற்க மறுப்பது ஏனோ?
அன்பர்களே, இதை விட பெரிய சைவத் துரோகம் இருக்க முடியுமா? சிவதா! சிவதா!
வேதத்தை இகழ்ந்து வேதவேள்விகள் புறக்கணிக்கப்பட்டதால் பாண்டிய நாடு மழையின்றி பல இன்னல்களை அடைந்து பின் செந்தமிழ்ச் சொக்கநாதப் பெருமானே பாண்டிய மன்னன் கனவில் வந்து வேதத்தின் பெருமையை அறிவித்து, வேத வேள்விகள் செய்ய உலவாக் கிழி அருளியதாக உலவாக் கிழி அருளிய படலம் கூறுகின்றது.
இதுபோலவே பெரியபுராணத்திலும் சிவபாதஇருதயர் வேதவேள்வி செய்யப் பொருள் வேண்டவும், திருஞானசம்பந்தப் பெருமான் "இடரினும் தளரினும்" எனும் பதிகம் பாட திருஆவடுதுறை அமர்ந்தருளும் அண்ணலும் உலவா பொற்க்கிழியை அருளியதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.மேற்கண்ட திருவிளையாடல் புராணம் & மற்றும் பெரிய புராண நிகழ்வுகளை ஒப்பு நோக்கி பார்க்கும் பொழுது வேதவேள்விகள் இவ்வுலக இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதன என்றும் மேலும் வேதம் தானே நமது ஆணை என்று இறைவனே அருளியுள்ளதால் வேதவேள்விகளின் பெருமைகளும் நமக்குத் தெரிய வருகின்றது.இவ்வாறு சைவ சமயம் ஏற்றுப் போற்றும் வேதத்தின் உண்மைகளை ஏற்க மறுத்து நிந்தனை செய்வதை நோக்கும் போது
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும
என்ற பொய்யா மொழிப் புலவரின் குறள் நினைவுக்கு வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை
உலவாக் கிழி அருளிய படலம் - திருவிளையாடல் புராணம்
ஏடார் அலங்கல் வரை மார்ப வெம்பால் என்றும அன்பு உடைமை
வாடா விரத விழுச் செல்வம் உடையாய் வைய மறம் கடிந்து
கோடாது அளிக்கும் செம் கோன்மை உடையாய் உனக்கு ஓர் குறை உளது உன்
வீடா வளம் சேர் நாட்டி இந் நாள் வேள்விச் செல்வம் அருகியதால்
மறையே நமது பீடிகையாம் மறையே நமது பாதுகையாம்
மறையே நமது வாகனம் மா மறையே நமது நூபுரம் ஆம்
மறையே நமது கோவணம் ஆம் மறையே நமது விழியாகும்
மறையே நமது மொழியாகும் மறையே நமது வடிவாகும்.
வேதம் தானே நமது ஆணைச் சத்தி வடிவாய் விதிவிலக்காய்
போதம் கொளுத்தி நிலை நிறுத்திப் போகம்கொடுத்துப் பல் உயிர்க்கும்
பேதம் செய்யும் பிணி அவிழ்த்து எம் பிரியா வீடு தருவது ஏன்
நாதம் செய்யும் தார் வேந்தே நமது செங்கோல் அது ஆகும்.
அந்த மறைகள் தமக்கு உறுதி ஆவார் அந்நூல் வழி கலி நோய்
சிந்த மகத் தீ வளர்த்து எம்பால் சிந்தை செலுத்தும் அந்தணரால்
இந்த மறையோர் வேள்வி மழைக்கு ஏது வாகும் இவர் தம்மை
மைந்த இகழ்ந்து கை விட்டாய் அதனான் மாரி மறுத்தன்று ஆல்
மும்மைப் புவனங்களும் உய்ய முத்தீ வேட்கும் இவர் தம்மை
நம்மைப் போலக் கண்டு ஒழுகி நாளும் நானா வறம் பெருக்கிச்
செம்மைத்தருமக் கோல் ஓச்சித் திகிரி உருட்டி வாழ்தி என
உம்மைப் பயன் போல் எளி வந்தார் உலவாக் கிழி ஒன்று உதவுவார்
மேற்கண்ட திருவிளையாடல் புராண பாடல்களுக்கு நம் நவீனர்கள் என்ன பொருள் கூற முடியும்?
இத்துணை பெருமையுடைய வேதங்கள் கடலில் அழிந்தன! மொழி பெயர்க்கப்பட்டன! என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்வதேனோ?
மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனம் வேண்டும் என்று நம் நந்தியம் பெருமான் கயிலை நாதனிடம் வேண்டிய விண்ணப்பத்தை சைவர்கள் தங்கள் சிரமேற் கொண்டு ஒழுக வேண்டும்.
"வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்" என்று நம் திருமுறை ஆணையிடுவதால் (சுந்தரர் தேவாரம்- ஆரூர்), இது போல் மறைகள் மற்றும் சைவ நிந்தை செய்வோர்களுக்கு துணை போதலே பெரும் பாவம் என சைவர்கள் தெளிய வேண்டும்.
உலவாக் கிழி அருளிய படலம் கூறிய அதே நிலை தான் , தற்சமயம் நம் தமிழ்நாட்டில் நிலவுகிறது.அன்று இறைவனே வெளிப்பட்டு பாண்டிய நாட்டினை காத்தருளினார்.அது போல் இப்போதும் எப்போதும் காலகாலனாகிய கண்ணுதல் கடவுள் நம்மைக் காத்தருள்வார்.
எல்லாம் வல்ல அன்னை அங்கயற்கண்ணி உடனாகிய செந்தமிழ்ச் சொக்கநாதப் பெருமான் திருவருள் நம்மை காத்து அருள்வதாக!
விடையேறும் வித்தகர் தோற்றுவித்த வைதிக சைவ வாய்மை நிலை பெற்று விளங்கும்.
பழைய வைதிக சைவம் பரக்கவே!
திருச்சிற்றம்பலம்